ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு: எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை

12.6.13

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை” என, அதிரடியாக அறிவித்துள்ளார், அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா. “40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, அனைத்திலும் வெற்றி பெறுவோம்,’” என்றும் அவர் கூறியுள்ளார். பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. உட்பட அநேக கட்சிகள் கூட்டணி விஷயத்தில் தலையை பிய்த்துக் கொண்டிருக்க, லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. நிலையை அறிவித்து மற்ற கட்சிகளை முந்தியுள்ளார் ஜெயலலிதா. தமிழகத்திற்கான திட்ட ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா நேற்று மதியம் 12:20 மணிக்கு டில்லி வந்தார். விமான நிலையத்தில் இருந்து அவர் சென்ற தமிழ்நாடு இல்லத்தில் பரபரப்பு காணப்பட்டது. காரணம், முதல்வரின் விமானம் சென்னையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே, ஐந்து ராஜ்யசபா இடங்களுக்கும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். டில்லி வரும் ஜெயலலிதாவிடம் இருந்து எப்படியாவது ஒரு சீட்டுக்கான ஆதரவை பெற்று விடலாம் என, எண்ணியிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள், பரதன் மற்றும் சுதாகர் ரெட்டி ஆகியோர் முதல்வரை சந்திக்க டில்லியில் காத்திருந்தனர். அதனால்தானோ, என்னவோ, தாம் டில்லி போய் இறங்கும் முன்னர் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிக்கச் செய்தார் ஜெ. டில்லியில் காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள், அ.தி.மு.க. தரப்பில் ஐந்து இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், ஏமாற்றம் அடைந்தனர். எனினும், ஏதாவது திருப்பம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் காணப்பட்டது. ஜெயலலிதா வந்து இறங்கியபின், பரதனும், சுதாகர் ரெட்டியும், ஜெயலலிதா இருந்த அறைக்குள் சென்றனர். 15 நிமிடங்களில் வெளியே வந்தனர்; மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்பட்டனர். “முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, ராஜ்யசபா தேர்தலில் எங்கள் கட்சி சார்பிலான வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்தோம். அதற்கு ஜெயலலிதா, ‘ஏற்கனவே நாங்கள் ஐந்து வேட்பாளர்களை ராஜ்யசபா தேர்தலில் நிறுத்தி அறிவிப்பும் வெளியிட்டு விட்டோம். உங்களது வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துகள்’ என கூறிவிட்டார். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எங்கள் கட்சி ஆதரவையும் முதல்வர் கேட்கவில்லை. ராஜ்யசபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுமா என்பது குறித்து கட்சித் தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்” என்று கூறிவிட்டு சென்றனர் இருவரும். சென்னை திரும்புவதற்கு முன், டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, “வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி சேரும் எண்ணம் இல்லை. இந்த நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே பலமுறை அறிவித்தபடி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களிலும் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதே, எங்களது குறிக்கோள்” என்றார். அ.தி.மு.க. தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டது. இனி தி.மு.க., தமிழகத்தில் தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. காரணம், நீண்ட காலம் தாதம் செய்தால், முடிவு எடுப்பதில் குழப்பம் இருப்பதாக ஒரு இமேஜ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிடும்.

0 கருத்துக்கள் :