தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க இந்தியா தொடர்ந்து பாடுபடும்: பிரதமர் மன்மோகன்சிங்

18.6.13

இலங்கையில், தேசிய அளவில், ஒருமித்த கருத்தை உருவாக்கி, தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில், 13வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்வதற்கு, இலங்கையில் உள்ள சிங்கள பயங்கரவாத கட்சிகள் முயற்சிப்பதாக, இம்மாதம் 9ம் திகதி பிரதமருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.
இம்மாதம், 11ம் திகதி கருணாநிதிக்கு, பிரதமர் பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், 13 வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தாங்கள் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்.
இது அந்நாட்டின் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்றாலும், அதனால், தமிழருக்கு ஏற்படக் கூடிய விளைவுகளை மத்திய அரசு பரிசீலனை செய்யும்.
நமது கருத்துக்களையும் இலங்கை அரசுக்கு தெரிவிக்கும்.
இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.
இலங்கை தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்து  நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு  மத்திய அரசு பாடுபடும்.
இலங்கையில், தேசிய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்கி  தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்க மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு, பிரதமர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :