சிறிலங்காவுக்கான சிறப்பு தூதராக பூரி. ஆங்கில வாரஇதழ்

17.6.13

இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் மீறும் வகையில் செயற்படுவதால், சிறிலங்காவுக்கு சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிப்பது குறித்து இந்திய பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்திய - சிறிலங்கா உடன்பாட்டை மீறும் சிறிலங்காவின் போக்கினால் கவலையடைந்துள்ள இந்திய பிரதமர், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், ராஜபக்ச அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தும் வகையிலும், இந்த சிறப்புத் தூதரின் நியமனம் அமையும் என்று கருதப்படுகிறது.

காங்கிரஸ் அரசாங்கம் எதிர்க்கட்சிகளும் சிறிலங்கா விவகாரத்தில், இணைந்து செயற்படுவதை விரும்புவதாகத் தெரிகிறது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்க அதிபர்கள் இத்தகைய சிறப்பு தூதுவர்களை நியமிப்பது வழக்கம்.

அதுபோன்றதொரு சிறப்புத் தூதுவரை நியமிக்க இந்தியாவும் திட்டமிடுகிறது.

சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராக அண்மையில் ஓய்வுபெற்ற இராஜதந்திரியான ஹர்தீப்சிங் பூரி நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் அண்மையிலேயே இந்தியாவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில், பூரி அரசியல் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

இந்திய - சிறிலங்கா உடன்பாட்டுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளில் பங்கேற்றவர் என்பதுடன் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் பூரி நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :