உங்கள் பிரச்சினைக்கு தீர்வு நீங்களே காணவேண்டும். யாழில் இந்தியக்குழு

5.6.13


இலங்கைவாழ் மக்களின் பிரச்சினைக்கு அவர்களே தீர்வைக் காணவேண்டும், இந்தியாவால் பிரச்சினைத் தீர்வுக்கு அனுரணை வழங்கவே முடியும் என்று யாழ்ப்பாணத்தில் தம்மைச் சந்தித்த சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இந்திய ராஜ்சபை பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். “இந்தியா உங்கள் நண்பன். நீங்கள் எல்லோரும் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். அதற்காக நாம் எம்மாலான உதவிகளைச் செய்வோம்” என்று குறிப்பிட்ட ரவிசங்கர் பிரசாத், எந்தவொரு நாட்டின்மீதும் இந்தியா தனது ஆளுகையைச் செலுத்த முற்படாது என்றும் தெரிவித்தார். கடந்தகாலத்தில் சில கசப்பான சம்பவங்கள் நடைபெற்றது எல்லோருக்கும் தெரிந்த விடயம் என்றும் கூறிய அவர், இலங்கைப் பிரச்சினையால் இந்தியா தனது முக்கிய தலைவர்களில் ஒருவரை இழக்கவேண்டி நேரிட்டதையும் நினைவூட்டினார். எனினும், கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்வது குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டும் என்றும், இதற்கு இந்தியா தன்னாலான பங்களிப்புக்களை தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்தார். இந்திய ராஜ்சபை பிரதி எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான தூதுக்குழுவினரிடம், தற்போதைய நிலைவரங்கள் குறித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு சிவில் சமூகப் பிரதிநிதிகளும் எடுத்துரைத்தனர். இதன்போது, பிரதானமாக, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியா அரசாங்கத்தின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தைப் பாதுகாப்பது இந்தியாவின் கடமை என்று பலராலும் வலியுறுத்தப்பட்டது. போருக்குப் பிந்திய சூழ்நிலையில், இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் துரித மீள்குடியேற்றம் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் என்பன குறித்தும் பாராட்டிப் பேசிய சிவில் சமூகப் பிரதிநிதிகள், எனினும், பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை, மதத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் உரிய தீர்வைக் காண இந்தியா உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். 2போருக்குப் பிந்திய புனர்வாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளில் இந்தியா வழங்கிவரும் பல்வேறு உதவிகளுக்கும் நன்றிய கூறிய மக்கள் பிரதிநிதிகள், எனினும், போர்ச்சூழலால் நலிவடைந்துபோன வடக்கு மாகாணத்தின் கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த இந்தியா மேலும் கைகொடுக்கவேண்டும் வேண்டுகோள் விடுத்தனர். குறிப்பாக, வட பகுதியில் முற்றாகச் செயலிழந்துபோயிருக்கும் கைத்தொழில் முயற்சிகளை மீள ஆரம்பிக்கச் செய்வதற்கான தூண்டுதலை வழங்குவதற்கும், தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிகள், நீண்டகால அடிப்படையிலான கடன்களை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தொழில் முயற்சிகள் செயலழிந்துபோயுள்ள நிலையில், இளைஞர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சிகள் அவசியமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தொழிற்பயிற்சி வழங்கல் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களிலும் இந்தியா தனது பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு மீனவர் சமூத்தின் சார்பாக முன்வைக்கப்பட்டது.

0 கருத்துக்கள் :