தெற்கு கரையோர மக்கள் சிறிலங்கா அரசு மீது கடும் கோபம்

12.6.13

சிறிலங்காவில் கடந்த சனிக்கிழமை வீசிய சூறைக்காற்றினால் பலியான மீனவர்களின் சடலங்கள் கடந்த இரண்டு நாட்களாக கரையொதுங்கி வரும் நிலையில், இந்த அனர்த்தத்துக்குப் பலியானவர்களின் தொகை 58 ஆக அதிகரித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தச் சூறைக்காற்றினால் பலப்பிட்டிய பிரதேசமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு குறைந்தது 25 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பேருவளையில் 10 பேரும், ரத்மலானையில் 5 பேரும், மொறட்டுவவில் 5 பேரும், தெகிவளையில் நால்வரும், அம்பன்கமுவவில் மூவரும், கட்டான, நுவரெலிய, ஹிக்கடுவ, பெந்தோட்ட, கொலன்ன, புத்தளம் பகுதிகளில் தலா ஒருவரும் இந்தச் சூறைக்காற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

மேலும் பலர் காணாமற்போயுள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான காலநிலை குறித்து அரசாங்கம் முன்னெச்சரிக்கை வழங்காதது தென்பகுதிக் கரையோரப்பகுதி மக்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், நேற்று மாலை பலப்பிட்டிய பகுதியில் மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வாகனத்தின் மீது ஒரு குழுவினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

0 கருத்துக்கள் :