தமிழ்க் கூட்டமைப்புக்கு புதுடில்லி அவசர அழைப்பு

11.6.13

இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்திலுள்ள முக்கிய அதிகாரங்களை நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழ்நிலையில், அவசரமானதும், முக்கியமானதுமான பேச்சுகளை நடத்துவதற்கு உடனடியாகப் புதுடில்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் அடுத்தவார முற்பகுதியில் புதுடில்லிக்கு விரையவுள்ளனர். அங்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உட்பட்ட தலைவர்களுடன் இவர்கள் முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளனர். 13வது திருத்தத்தை ஒழிப்பதற்கான முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ள சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புதுடில்லிக்கு அழைத்துள்ள இந்திய மத்திய அரசு, 13ஆவது திருத்தம் தொடர்பில் இலங்கையில் எழுந்துள்ள நிலைமைகள் குறித்து விரிவான பேச்சுகளை நடத்தவுள்ளது. இலங்கையின் தமிழர் பிரச்சினைத் தீர்வில் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசு மீறிச் செயற்படுவதால் கடந்த காலங்களைப்போல் விசேட இராஜதந்திரி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி நிலைமைகளை ஆராய்வதற்கும் இந்தியா ஆலேõசித்து வருவதாகத் தெரிகிறது. கடந்த தசாப்தங்களில் இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளான கே.பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டாரி போன்றோர் இலங்கைக்கு அனுப்பப்பட்டமைபோன்று தற்போதும் மூத்த இராஜதந்திரி ஒருவரை அனுப்புவதற்குப் புதுடில்லி ஆலோசித்து வருõதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துக்கள் :