கோத்தாபயவால் 80 ஆண்டுகால இந்துக் கோவில் குடிபெயர்கிறது

10.6.13

கொழும்பில் அலரி மாளிகைக்குப் பின்புறம் உள்ள 80 ஆண்டுகால இந்துக் கோவில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவினால், இன்று வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையின் முடிவில், அலரி மாளிகைக்குப் பின்புறமாக சிறி பூமாரி அம்மன் கோவில் உள்ளது.

1920களில் இந்தப் பகுதியில், கொழும்பு மாநகரசபையினால், கொள்ளுப்பிட்டி தர்மகிட்யராமய விகாரைக்குப் பின்பாக, குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளர் சமூகத்தினரின் வழிப்பாட்டுக்காக 1930களில், இந்தக் கோவில் அமைக்கப்பட்டது.

மூன்று தல விருட்சங்களைக் கொண்டு 80 ஆண்டுகளாக இயங்கும் இந்தக் கோவில் கொள்ளுப்பிட்டிப் பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது.

பல இடங்களில் இருந்து பக்தர்கள் இங்கு வழிபாட்டுக்காக வருகின்றனர்.

இந்தநிலையிலேயே கொழும்பு மாநகரசபை இந்தக் கோவிலை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளது.

இந்தக் கோவில் அமைந்துள்ள இடத்தில் கொழும்பு மாநகரசபை வாகனத் தரிப்பிடம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இந்தக் கோவிலை அமைக்க வழங்கப்பட்டுள்ள மாற்று இடம் நவம் மாவத்தையில் அமைந்துள்ளது.

இது சலவையகப் பகுதி என்றும் அது கோவில் அமைப்பதற்குப் பொருத்தமான இடம் இல்லை என்றும கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ருக்சன் பெரேரா தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :