5 ஆண்டாக தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த இளம் பெண்

27.6.13

வேலூரில் கடந்த 5 ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண் போலீஸாரால் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டார்.
வேலூர், மாநகராட்சி பழைய கட்டடத்துக்குப் பின்புறம் உள்ள லால்சிங் குமரன் தெருவில் ஒரு பெண் தனிமையாக வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மாமன்ற உறுப்பினர் உஷாநந்தினிக்குத் தகவல் கிடைத்தது.


அதைத் தொடர்ந்து அவர் வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸாரை அணுகினார். காவல் நிலைய போலீஸார் அந்த வீட்டுக்கு மாலையில் சென்றனர். வீட்டின் முன்பகுதி பூட்டப்பட்டிருந்தது.
அருகில் இருந்த வீடுகளைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தபோது, அந்த வீட்டுக்குள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இளம் பெண் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அப்பெண்ணின் தாயார் மனநிலை சரியில்லாமல் அதே வீட்டில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து போனதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறை வைக்கப்பட்ட பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கினர். அதே தெருவில் வசித்து வரும் அவரது சகோதரி புனிதாவின் கணவர் சந்திரசேகரன் உடனடியாக அந்த வீட்டுக்கு வரவழைக்கப்பட்டார்.
பூட்டியிருந்த வீட்டுக் கதவைத் திறந்தபோது, தரையில் படுத்திருந்த அந்த இளம் பெண் போலீஸாரை கண்டதும் மிரட்சியடைந்தார்.

சகோதரியின் கணவர் சந்திரசேகரன் மற்றும் மீட்புக்கு உதவிய உஷாநந்தினி உள்ளிட்டோர் உதவியுடன் அப்பெண் வேலூர் மகளிர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
நடக்க இயலாத நிலையில் மிகவும் சோர்வாக காணப்பட்ட அவரிடம் போலீஸார் தகவல்களைத் திரட்டினர். அவரது பெயர் கீதா (25) என்பதும், தொலைதூரக் கல்வியில் பி.ஏ. இளங்கலைப் பட்டம் பெற்றவர் என்பதும், சிறிது காலம் நர்சரி பள்ளி ஒன்றில் பணியில் இருந்தார் என்பதும் தெரியவந்தது.

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவரது தந்தை மாயக்கண்ணன் காலமாகி விட்டார். தாயார் சகுந்தலா சில மாதம் முன்பு இறந்து விட்டார்.
சகோதரர் சந்தானம் வெளிநாட்டில் வசித்து வருகிறார். மற்றொரு சகோதரி காட்பாடியில் உள்ளார் என அப்பெண் தெரிவித்தார். தனக்கு அவ்வப்போது சகோதரி மற்றும் அவரது கணவர் உணவு வழங்கி வந்தனர் என்றும் கூறினார்.

அவர் எதற்காக வீட்டிலேயே அடைத்துவைக்கப்பட்டார் என்ற விவரத்தைக் கேட்டதும் அப்பெண் கூற மறுத்து விட்டார். இதையடுத்து, அவரது சகோதரி புனிதா மற்றும் அவரது கணவர் சந்திரசேகரனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், தாயும், மகளும் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால் அவர்களை தனி வீட்டில் வைத்து பராமரித்தோம் என தெரிவித்துள்ளார்.

பின்னர் கீதா வேலூர், சேண்பாக்கத்தில் உள்ள பிற்காப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

0 கருத்துக்கள் :