கின்னசில் இடம் பெற்ற அபூர்வ நீலக்கல் ரூ.1000 கோடி

10.6.13


ரக்பி பந்து வடிவில் உள்ள 61 ஆயிரத்து 500 கேரட் நீல கல்லை அதன் உரிமையாளர் ரூ. ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்ய உள்ளார். தென் ஆப்பிரிக்க எல்லையோரம் உள்ள மடகாஸ்கர் நாட்டில் 1995ம் ஆண்டு இந்த நீலக்கல் கிடைத்துள்ளது. 28 சென்டிமீட்டர் உயரமுள்ள இந்த கல்லில் மாவீரன் அலெக்சாண்டர், மார்டின் லூதர் கிங், சேக்ஸ்பியர், அன்னை தெரசா ஆகியோரின் முகங்களை ஒத்த வடிவமைப்பு காணப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில், கடந்த 15 ஆண்டு காலமாக இந்த நீலக்கல் வைக்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய நீலக்கல் என்ற வகையில் இந்த நீலக்கல் கின்னசில் இடம் பிடித்தது. ஆனால், தற்போது இந்த சாதனையை வேறொரு நீலக்கல் முறியடித்து விட்டது. 2002ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா, 2004ம் ஆண்டு பிரின்சஸ் என்ற உல்லாச சொகுசு கப்பலின் முதல் பயணம் ஆகியவை நிகழ்ந்தபோது இரண்டே முறை மட்டும் இந்த நீலக்கல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த அரிய நீலக்கல்லை விற்றுவிட அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளார். ஆரம்ப விலையாக 18 கோடி அமெரிக்க டாலரை (இந்திய மதிப்புக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய்) அவர் அறிவித்துள்ளார். துபாயில் நடைபெறவுள்ள இந்த ஏல விற்பனையின்போது போட்டி அதிகமானால் 20 கோடி டாலர்கள் வரை விலை போகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :