தாய், மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்த இலங்கைத் தமிழர்

21.5.13

சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகர் 42-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (52).
 இலங்கைத் தமிழரான இவர் உள்நாட்டு போர் காரணமாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறி தமிழகம் வந்து சென்னையில் குடியேறினார். தனது தாய் தங்கம்மாளையும் இவர் உடன் அழைத்து வந்திருந்தார்.
 இவரது மனைவி சித்ரா (45) இவர்களுக்கு சமீரா (12) என்ற ஒரே ஒரு மகள் இருந்தார். அவர் நங்கைநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
 சுந்தரேசன் ஆதம்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். முதலில் நல்ல லாபத்துடன் நடந்து வந்த அந்த நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நஷ்டம் ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
 இதன் காரணமாக அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் குடும்பத்தை நடத்த சிரமப்பட்ட சுந்தரேசன் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.
கடந்த சில தினங்களாக அவருக்கு கடன் கொடுத்தவர்கள், பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த சுந்தரேசன் விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டார். நேற்றிரவு மது அருந்தி விட்டு வீடு திரும்பிய அவருக்கும் அவரது மனைவிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 விரக்தியில் இருந்த சுந்தரேசனுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மன உளைச்சலில் தவித்த அவர் அப்படியே தூங்கி விட்டார். பக்கத்து அறைகளில் அவரது தாய், மனைவி, மகள் படுத்துத் தூங்கினார்கள்.
 இன்று அதிகாலை 3 மணிக்கு எழுந்த சுந்தரேசனுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பால் கொலை வெறி ஏற்பட்டது. குடும்பத்தையே தீர்த்து கட்டி விட்டு உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த அவர், சமையல் அறைக்குள் சென்று கத்தியை எடுத்து வந்தார்.
 முதலில் தாய் தங்கம்மாள் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பிறகு மனைவி, மகள் இருவரையும் கழுத்தை அறுத்து கொன்றார். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர்கள் அந்த அறைக்குள்ளேயே விழுந்து பிணமானார்கள்.
 பிறகு வீட்டை விட்டு வெளியேறிய அவர் அருகில் உள்ள ரெயில் தண்டவாளப் பகுதிக்கு நடந்து வந்தார். பரங்கிமலை, பழவந்தாங்கல் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் முதல் மின்சார ரெயில் வந்தது.
 அந்த ரெயில் முன் சுந்தரேசன் பாய்ந்தார். உடல் துண்டு, துண்டான நிலையில் அவர் உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தாம்பரம் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு தில்லை நடராஜன் உத்தரவின் பேரில் தாம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார்.
 சுந்தரேசன் உடலை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது அவரது செல்போன் சேதம் அடையாமல் இருப்பதை கண்டனர். அதன் மூலம் துப்பு துலக்கியபோது, அது ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் வசிக்கும் சுந்தரேசன் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
 இதையடுத்து தாம்பரம் ரெயில்வே போலீசார் சுந்தரேசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டுக்குள் 3 பேர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி அவர்கள் ஆதம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
 பரங்கிமலை போலீஸ் துணைக் கமிஷனர் சரவணன், உதவிக் கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் இளவரசு, நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீனதயாளன், ராஜேந்திரன் மற்றும் போலீசார் தில்லை கங்காநகர் 42-வது தெருவில் உள்ள சுந்தரேசன் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். முதல் கட்ட ஆய்விலேயே குடும்பத்தினரை கொன்று விட்டு சுந்தரேசன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.
 இதையடுத்து 3 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே வீட்டுக்குள் 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதால் சுந்தரேசனுக்கு வேறு மர்ம நபர்கள் யாராவது உதவினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 இது தவிர மர்ம கும்பல் ஏதேனும் இந்த கொலைகளை செய்தனரா என்ற சந்தேகமும் போலீசாரிடம் உள்ளது. ஆதம்பாக்கம் போலீசாரும், தாம்பரம் ரெயில்வே போலீசாரும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து இந்த கொலை, தற்கொலை பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 கருத்துக்கள் :