சாதி மோதல்கள் தமிழகத்தை அடுத்த முள்ளிவாய்க்காலாக்கப் போகிறது..

4.5.13

புதுமாத்தளன் பேரழிவிற்குப் பிறகும் பாடம் படிக்காத புண்ணாக்கு தமிழர்கள்… மரக்காணம் சாதிக்கலவரம் தமிழகத்தை இப்போது தீப்பற்றி எரிய வைத்துக் கொண்டிருக்கிறது.. வீதியில் இறங்கினால் எந்தப் பேருந்தை எந்தச் சாதி எந்த நேரம் கொழுத்தும் என்று தெரியாதளவுக்கு சாதிப்பேய் தமிழகத்தில் சதுராடிக்கொண்டிருக்கிறது. சாதி வாக்கை உறுதி செய்வதற்காக இப்போது களத்தில் இறங்கியிருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ், மற்றும் தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள். இவர்கள் இருவரும் இதுவரை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டுக்கொண்டிருந்தவர்கள்..


 இன்று சாதி அரசியலுக்காக இவர்கள் செய்யும் வேலைகளைப் பார்த்தால் வன்னியில் செத்து புதைக்கப்பட்ட மண்டையோட்டில் கூட கண்ணீர் வடியும். இது வெறும் கோபத்தால் எழுதப்படும் கட்டுரை அல்ல.. பௌர்ணமி விழாவில் காடுவெட்டி குருவும், அன்புமணி ராமதாசும் பேசிய பேச்சுக்களை வைத்தே எழுதப்படுகிறது. “வன்னிய சமுதாயத்தை போலீசாலும் கட்டுப்படுத்த முடியாது…” என்று குருவும், “சுனாமியையே சந்திப்பார்கள் என் தம்பிகள்..” என்று அன்புமணி ராமதாசும் பேசியது தமிழனைக் குறித்தல்ல வன்னியர்கள் என்ற சாதிப்பிரிவைப்பற்றி..

வாளை எடுத்தால் இரத்தம் பார்க்காமல் வைக்கமாட்டான் வன்னியன் என்கிறாய்..! சற்லைற் போர் புரியும் காலத்தில் வாளெடுத்து யாரோடு சண்டை போடப்போகிறாய்..? அத்துடன் நின்றீர்களா..? அந்தக் கூட்டத்திற்கு ஆகுதி வேண்டுமென திட்டமிட்டு, மற்றைய சாதிகளுடன் மோலை ஏற்படுத்தி, ஆயுதங்கள், பெற்றோல் குண்டுகளை வீசி, கலவரத்தை ஏற்படுத்தவும் வழி செய்தீர்கள்..

இதை நாம் சொல்லவில்லை நேரில் பார்த்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவாகாமி கூறுகிறார். நூற்றுக்கணக்கான பேருந்துகள் தாக்கப்பட்டு, பல வாகனங்கள் எரிக்கப்பட்டு, பேய்கள் நடமாடும் இடத்திற்குள் போக முடியாதது போல மக்கள் அஞ்சி வாழ வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. பிராமணருக்கு சாதிச்சங்கம் அமைத்த கழிசடை சோ ராமசாமிக்கும், இந்து ராமகோபாலனுக்கும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய உங்களுக்கும் இன்று என்ன வேறுபாடு..? சதி செய்துவிட்டார்கள், காழ்ப்புணர்ச்சியில் டாக்டர் ராமதாசை சிறையில் போட்டுவிட்டார்கள் என்கிறீர்கள்…

  அருவரி படித்தவனுக்கும் தெரியும் நீங்கள் இருவரும் பேசியது சாதி வெறியைத் தூண்டும் பேச்சு என்பது.. காடுவெட்டி குருவும், அன்புமணியும் பேசிய பேச்சுக்களை தவறென்று பா.ம.க ஒப்புக்கொள்ளவில்லை. அரசுக்கும் இறைமைக்கும் எதிராக சாதிப்பலத்தை வைத்து சவால் விடுவது தவறு..! கிரிமினல் குற்றம்..! என்பது தெரியாமலா காடுவெட்டிக் குரு எம்.எல்.ஏ ஆக இருக்கிறார்.. அன்புமணி மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்…? இந்த விவகாரத்தை வெறுமனே பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் திருமாவளவனை மட்டும் வைத்துப் பார்க்க முடியாது.. தமிழகத்திற்கு தூர நின்று பார்க்கும் ஒவ்வொருவரும் ஒட்டுமொத்த தமிழினத்தின் சீத்துவக்கேடாகவும், சீரழிவாகவுமே இதைப்பார்ப்பார்கள். இந்த அவமானம் ஒட்டுமொத்த தமிழினத்தையே பாதிக்கும்… ” தமிழன்… தன்னுடைய இனத்திற்காக உயிர்கொடுக்க பொங்கி எழ மாட்டான் சாதிக்காக உயிர் கொடுக்க களமிறங்குவான்..” என்ற க.ப.அறவாணனின் தமிழர் தொடர்பான வரலாற்று மதிப்பீடு மறுபடியும் உறுதியாகியுள்ளது..

நேற்றுவரை தமிழகத்தில் என்ன நடந்தது..? மாணவர் போராட்டம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது..! சிங்களவன் திகைத்து நின்றான்…! வட இந்தியன் சிந்திக்கத் தொடங்கினான்..! இன்று எல்லாவற்றையுமே அடித்துப் போயிருக்கிறது உங்கள் சாதிப் பிரச்சனை.. ” மாணவர் போராட்டத்தை சாதிப்பேய் விழுங்கிவிட்டது..” என்று சிங்களவன் சிரிக்கிறான்.. வட இந்தியனோ, ” அட இவ்வளவு விரைவாக வன்னியை மறந்துவிட்டார்களே நமது வன்னியர்கள்” என்று ஆறுதலடைகிறான். வட இந்தியர்களின் பேஸ்புக், ரிவிற்றர்களை பாருங்கள்.. வட இந்தியரான தாங்களும் சிங்களவனும் இராமர் வம்சம் என்றும், தமிழர்கள் அரக்கர்கள் என்றும் அவர்கள் இப்படித்தான் தமக்குள் அடிபட்டு சாவார்கள்..

சாவது நல்லது என்றும் எழுதுகிறார்கள்.. இக்கருத்தை முக்கிய வட இந்திய அரசியல்வாதி சொல்லியுள்ளாராம்.. என்றும் மேற்கோள் காட்டுகிறார்கள். திருவள்ளுவர் பிறந்த இனத்தில், இளங்கோவடிகள் தோன்றிய மண்ணில், ஒளவை நடமாடிய தெருவில் நின்று கொண்டு சாதி மோதலில் ஈடுபட்டு நாட்டை எரிக்கிறீர்களே..? உங்களுக்கு வெட்கமில்லை..? ஈழத்தில் தமிழன் முப்பதுக்கு மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி முரண்பட்டு, அழிய என்ன காரணம்.. இந்தியாவில் இருந்து இறக்குமதியான இந்தச் சாதிப்பிரிவே காரணம்.. இன்று அந்தச் சாதிக் குரோதத்தில்தானே சிங்களவன் வீட்டு கோடியாலில் மூக்கைப் பொத்திக் கொண்டு சேவகம் செய்கின்றன பல தமிழ் இயக்கங்கள்.. என்றைக்காவது சிங்களவன் சாதி மோதலில் நாட்டை எரித்தானா..? என்று கேட்டுப்பார்க்க வக்கில்லாத அறிவிலிகள்..

  சிறிய தீவில் இருந்து 120 கோடி மக்களுள்ள இந்தியாவிற்கே சிங்களவன் ஆப்பு வைக்க என்ன காரணம்..? கண்டிச் சிங்களவன், கரையோர சிங்களவன் என்று அவனுக்குள் பிளவுகள் இருந்தாலும், அவன் அதற்கான மோதலை ஏற்படுத்தி உங்களைப் போல நாட்டை எரிக்கவில்லை.. அதுவே அவனுடைய வெற்றி.. இன்று பிராமண வெறியால் சுற்றவர உள்ள ஆறு நாடுகளையும் பகைத்து தென்னாசியாவில் இந்தியா தனித்து நிற்க எது காரணம் இதே சாதி வெறியும் மேட்டிமைத்தனமும்தான்.. தன் உடன்பிறப்பை வன்னியில் கொன்றொழித்தபோது சிங்களவனுடன் கூட நின்ற குரோதத் தமிழரை வழிநாடாத்தியது கொள்கையா.. மார்க்சியமா.. லெனினிசமா.. எது… எதுவும் இல்லை வெறும் சாதி, பிரதேச குரோதங்களே… எந்தத் தத்துவத்தின் வழிகாட்டலில் இசைப்பிரியாவை இழுத்துவந்து சிங்களவனின் முன் போட்டான் தமிழன்..

பாலச்சந்திரனை எந்த இசத்தை அடிப்படையாக வைத்து பிடித்துக் கொடுத்தான்..? வன்னியில் தமிழனை அழிக்க உலக நாடுகள் ஒன்றுபட்டபோது தமிழன் உங்களைப் போலத்தான் தனக்குள் பிளவுபட்டுக்கொண்டிருந்தான்.. எதிரிக்கு வெற்றியை தாம்பாளத்தில் எடுத்துத் தாரை வார்த்துக் கொடுத்தான்.. சாதி இருக்கும் வரை தமிழனுக்கு நாடு கிடையாது, மரியாதை கிடையாது, உலக அரங்கில் அவன் கூலியாகவே இருக்க வேண்டும்.. முள்ளிவாய்க்காலுக்குள் செத்துச் சுண்ணாம்பானபோது நாம் கண்ட அரிய உண்மை இது.. அதற்காக அதிமுக, திமுக சரியென்று கூறவில்லை.. நீங்கள் இருவரும் தமிழினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்றால் இனி சாதிக்கட்சிகளுடன் கூட்டு இல்லை என்று இன்றுவரை ஒரு பொது ஒப்பந்தம் எழுதாமல் இருப்பது ஏன்..?

ராமதாசையும், காடுவெட்டியையும், திருமாவளவனையும் விட பெரிய குற்றவாளிகள் ஜெயலலிதாவும், கருணாநிதியும்தான் என்பதையும் மறுக்க முடியாது,

 காரணம் இன்றும்கூட நீங்கள் அந்த அறிவிப்பை வெளியிடவில்லை. நாளை நடக்கப்போகும் தேர்தலில் சாதி ஓட்டுக்களை நீங்கள் இருவரும் எண்ணிப்பார்த்து பேரம் பேசப்போகிறீர்கள்… சாதிக்கட்சிகளை வளர்த்தது நீங்கள் இருவரும்தான்.. இன்று தமிழகம் எரிவதற்கும் முழுக்காரணம் நீங்கள் இருவருமே.. ராமதாசையும், காடுவெட்டி குருவையும் சிறையில் அடைப்பதாலும், பொய் வழக்கு போடுவதாலும், கஞ்சா வழக்கு போடுவதாலும் பயனில்லை. அன்று சாதி குறைந்தவன் என்பதால் டாக்டர் ராமதாஸ் வீட்டில் சாப்பிடப் போகாமல் தவிர்த்த ஜெயலலிதாவின் சாதி வெறியையும் இன்று வசதியாக மறந்துவிட முடியாது. சிங்கள அரசு சர்வதேச போர்க் குற்றவாளி என்பதுபோல சாதி அரசியலும் சர்வதேச போர்க்குற்றம் போன்ற உலகக் கிரிமினல் குற்றமே.. இது அனைவரும் களமிறங்க வேண்டிய நேரம்.. எந்த அரசியல் கட்சிகளையும் ஏற்றுக்கொள்ளாத மாணவர்களின் கருத்து எவ்வளவு சரியானது..

முதலில் மாணவர்களும், கற்றவர்களும் களமிறங்க வேண்டும்.. பகிரங்கக் கூட்டறிக்கை விடவேண்டும்.. தேர்தல் அல்ல… மக்களுக்கு பகுத்தறிவு கொடுத்து, இப்படியான ஏமாற்று மோசடிகளுக்கு பலியாகாமல் இருக்கும்படியான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். நாம் வாழ்வது கற்காலத்தில் அல்ல இணையம் ஆட்சி செய்யும் 21 ம் நூற்றாண்டின் பொற்காலத்தில்.. ஆகவே.. அரசியல் கட்சிகளுக்கு வால் பிடிக்காமல் படித்தவர்களும், அறிவுள்ளவர்களும் சுயநலமின்றி உடனடியாக களமிறங்க வேண்டும்… தவறினால்.. நாமே நமக்குள் மோதி தமிழகத்தை முள்ளி வாய்க்காலாக்கினாலும் ஆச்சரியப்பட முடியாது..

யாருக்கும் வால் பிடிக்காமல், எவனுக்கும் அஞ்சாமல் உண்மையை நெஞ்சில் இருத்தி முள்ளிவாய்க்கலில் இழந்த இழப்பில் நின்று சொல்கிறோம்.. அலைகளுக்காக கி.செ.துரை 03.05.2013 வெள்ளி மதியம்

0 கருத்துக்கள் :