முள்ளிவாய்க்கால் சொல்லித் தந்த பாடங்கள்

18.5.13

சுதந்திரம் வேண்டி விடுதலைக்காக போராடிய ஒரு தேசத்தின் நிழல் அரசின் முடிவு எண்ணப்பட்ட நாள்கள் அவை. இப்படியான நாள்கள் வரும் என்று ஈழத்தமிழர்கள் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.


ஆனால் காலம் அந்த சாவு இருளின் பள்ளத்தாக்கிற்கு அவர்களை கொண்டு சென்றதுடன் கொன்றும் சென்றது. கடல், தரை, வான் என முப்படைகளையும் சட்டநிர்வாக, நீதி நிதி பரிபாலனம் என்ற கட்டமைப்புக்களையும் கொண்டு முடிசூடா அரசாக விளங்கிய தமிழரின் அரசை, உரிமைப்போராட்டத்தை உலக வல்லாதிக்கங்களான அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் துணை கொண்டு அரச பயங்கரவாதத்தின் மூலம் தமிழ் மக்களை வெற்றி கொண்டது வெறிகொண்ட இலங்கை அரசு. இது நான்கு வருடங்களுக்கு முன்பு இதே காலத்தில் நடந்தேறியது.

அப்பாவித் தமிழ் மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, இருக்க இடமின்றி சிறிது இளைப்பாறக்கூட முடியாமல் துரத்தி துரத்திக் கொல்லப்பட்டனர். விமானக் குண்டுவீச்சு, பல்குழல் பீரங்கிகள், கொத்தணிக் குண்டுகள், இரசாயனக் குண்டுகளால் மக்களின் உடலங்கங்கள் சிதறிப் போயின.
பலர் பிணத்தோடு தூங்கி, பிணத்தோடு பிணமாக வீழ்ந்தனர். மேலும் பலர் நடை பிணங்களாகினர். நிலமெல்லாம் இரத்தமாக இருந்தது. ஐ.நா. நாற்பதினாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கைவிட்டது.
ஆனால் இறுதிப் போருக்கு முன்பிருந்த சனத்தொகையோடு அளவிடும் போது மாண்டு போனவர்களின் தொகை இதுவரை கணக்கிடப்படாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.
 
 உடலுறுப்புக்களை இழந்துள்ளோர் பல்லாயிரக்கணக்கிலிருக்க காணமல் போனோர் பட்டியல் மற்றொருபுறம் நீள்கிறது. இரசாயனக் குண்டுகளின் தாக்கத்தால் புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு எமது சமூகம் உள்ளாகி இருக்கிறது.

மே 18 2009 நண்பகல் நேரம் வடக்கு வானம் இருண்டது. சூரியன் சில நிமிடங்கள் தன்னை மறைத்துக் கொண்டான். கருமேகங்கள் ஒன்றாகக் கூடின. கண்கொண்டு பார்க்க முடியாத மின்னல் வெட்டுக்கள்.
காது கொண்டு கேட்கமுடியாத தொடர் இடி. ஆனால் ஒரு துளி மழை கூட இல்லை. ஒரு தேசத்தின் முடிவை, அறத்துக்கு புறம்பான போரை அந்த அசரீரி காட்டி நின்றது. தமிழினத்தின் ஆயுதப் போராட்டம் முடிந்துவிட்டது என்பதை இதைக் கொண்டே அநேக மக்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். இது கதையோ அல்லது கற்பனையோ அல்ல எம் இன அழிப்பின் உண்மை.

இந்த நூற்றாண்டின் மனித இனப்படு கொலையின் சின்னம், அடையாளம். அதுவே முள்ளி வாய்க்கால். எமக்கும், போராடும் மனித குலத்திற்கும் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கின்றது.
அந்தப் பாடங்கள் ஈழத் தமிழர்களால் முழுமையாகக் கற்கப்பட்டு விட்டதா?, உணரப்பட்டு விட்டதா?, விளங்கிக் கொள்ளப்பட்டு விட்டதா? எம்முள் இருக்கும் ஒற்றுமையின்மையே எமது முதல் எதிரியும், துரோகியும் ஆகும்.
வேறு எந்த இன விடுதலைப் போராட்டத்திலாவது இந்த அளவுக்கு காட்டிக் கொடுப்புகளும், துரோகத்தனங்களும் இருந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இவ்வளவு இழப்புக்களுக்கு பின்னும் அதன் தாற்பரியத்தை உணராதவர்களாகவே எமது சமூகம் இன்றும் இருக்கின்றது.
சுயாட்சிக்காக, உரிமைக்காக, அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு சமூகம் சாதாரணமாக அரசியல்வாதிகள் செய்யும் அரசியலை செய்ய முடியாது. அப்படிச் செய்யின் அது விடுதலைக்கு உலைவைப்பதாய் அமையும். இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை ஒற்றுமைப்பட்டு ஒரு திசையில் செல்ல முடியாதவர்களாய் இருக்கின்றார்கள்.
பொது மேடையில் மண்ணுக்காக மாண்டவர்களுக்கும், மக்களுக்கும் அக வணக்கம் செலுத்தும் இவர்கள் எதற்காக அவர்கள் இறந்தார்கள் என்பதை இன்னமும் சரிவரப் புரிந்தவர்களைப் போல் நடந்துகொள்ளத் தவறியிருக்கிறார்கள். எப்போது ஒற்றுமைப்படுகிறோமோ அப்போதுதான் எமக்கு விடுதலை. அது எப்போது நடக்கும்?

அரசியல் இராஜதந்திரங்களைப் பொறுத்தவரையில் நிரந்தரப் பகைவனும் இல்லை. நண்பனும் இல்லை. ஆனால் நிலைத்திருப்புக்கு தங்கி வாழுதல் அவசியம் என்னும் நடைமுறைக் கோட்பாட்டுக்கமைய நிரந்தர நண்பர்களை கட்டாயம் உருவாக்க வேண்டியுள்ளது.
ஓர் அரசாக காட்சியளித்த நாம் எமக்கு ஒரு இக்கட்டான சுழல் வரும்போது எமக்காக உண்மையாக இருக்கக் கூடிய ஒரு நட்பு நாட்டை நாம் உருவாக்கி கொள்ளத் தவறிவிட்டோம். தமிழர் முள்ளிவாய்க்காலுக்காக இட்ட தவறுகளில் இதுவும் ஒன்று.
தேசிய இனமாக இருக்கும் எமக்கு இன்று சர்வதேச அரசியல் களம் திறக்கப்பட்டுள்ளது. எம்மை ஒரு தரப்பாக சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. இராஜதந்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சாணக்கிய அடிப்படையில் தமக்கான சிறந்த நண்பர்களை தமிழர் தரப்பு உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
கருணாவினுடைய பிளவு தொடங்கி ஆயுதக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள், சர்வதேச ஆயுதக் கொள்வனவு, வலைப்பின்னல் முடக்கம், இலங்கைக்கான ஆயுத தளபாட வசதியளித்தல், செய்மதி ரீதியான உதவிகள், பயங்கரவாதிகளாகப் பிரகடனம் செய்தல் என பலவற்றை தமிழருக்கெதிராக செய்த அமெரிக்கா இன்று தமிழர் நலன் பேசுகிறது.
 
 அமெரிக்காவுக்கு தமிழர் மீது அன்போ, பாசமோ, அக்கறையோ கிடையாது. மாறிவரும் பூகோளப் புவிசார் அரசியல் அமெரிக்காவுக்கு அந்த நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் அமெரிக்க சார்பு அரசு அமையும் போது இந்த நிர்ப்பந்த அரசியல் தேவையற்றதாகப் போய்விடும் என்பது நிதர்சனம். ஆக இவற்றுள் எமது அரசியல் அடிபட்டுப் போகாத படி எமக்கானதை நாம் பெறுவதே முதிர்ச்சி அடைந்த அரசியல் ஞானத்தினுடைய பிரயோகமாக இருக்கும்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும் நாம், அதற்கேற்றபடி அரசியலை நகர்த்தக்கூடியவர்களாக இருக்கவேண்டும். எமக்குள் ஒற்றுமைப்பட்டு முள்ளிவாய்க்கால் சொல்லித்தந்தவற்றை சரிவர உணர்ந்து செயற்படாது போகுமிடத்து அதாவது பலவீனங்களை பலப்படுத்துவதோடு கட்டமைக்கப்பட்ட செயற்றிட்டத்தின் ஊடாகப் பயணிக்காவிடின் எமக்கான இலக்கு நீண்டதூரத்திலேயே இருக்கும்.
அதைவிடுத்து எந்த ஏக்கத்துடன் தமிழர்கள் மாண்டார்களோ அதை நிறைவேற்றுவதே தமிழ் மக்கள் அவர்களுக்குச் செய்யும் ஆத்மார்த்த அஞ்சலியாக அமையும். இவ்வளவு இழப்புக்களுக்கு பின்னும் அதன் தாற்பரியத்தை உணராதவர்களாகவே எமது சமூகம் இன்றும் இருக்கின்றது.
சுயாட்சிக்காக, உரிமைக்காக, அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு சமூகம் சாதாரணமாக அரசியல்வாதிகள் செய்யும் அரசியலை செய்ய முடியாது. இந்த நூற்றாண்டின் மனித இனப் படுகொலையின் சின்னம், அடையாளம். அதுவே முள்ளிவாய்க்கால்.
எமக்கும், போராடும் மனித குலத்திற்கும் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கின்றது அது. அந்தப் பாடங்கள் ஈழத் தமிழர்களால் முழுமையாகக் கற்கப்பட்டு விட்டதா?, உணரப்பட்டு விட்டதா?, விளங்கிக் கொள்ளப்பட்டு விட்டதா? பிரதி :உதயன்

0 கருத்துக்கள் :