தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகள்!- அமெரிக்கா அறிவிப்பு

31.5.13


இலங்கையுடனான தீவிரவாத முறியடிப்புக்கு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை அமெரிக்கா கடந்த ஆண்டில் மட்டுப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது. இலங்கை படைகளால் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமைமீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சட்டரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், இந்த ஒத்துழைப்பை மட்டுப்படுத்துவதற்கு காரணமாகியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள 2012 ம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான நாடுகளின் அறிக்கையிலேயே இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 2009இல் தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதி ஆதரவு வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவது குறித்து இலங்கை கவலை கொணடுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளினது என்று குற்றம்சாட்டப்படும் நிதி அமைப்புகளை இலக்கு வைத்து பல தீவிரவாத முறியடிப்பு செயற்பாடுகளை இலங்கை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற பிரதேசங்களில், இலங்கை 2012ம் ஆண்டில் பலமான இராணுவத்தை பராமரித்து வந்ததாகவும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீள எழுச்சி கொள்ளும் சாத்தியம் குறித்து குரல் எழுப்பப்பவதாகவும் அமெரிக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் எச்சங்களை முற்றாக அழிப்பதற்கு சிறிலங்காவில் தீவிரவாத முறியடிப்பு சட்டங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது. தீவிரவாத முறியடிப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம், உள்நாடு பாதுகாப்புத் திணைக்களம், பாதுகாப்புத் திணைக்களம், போன்றவற்றுடன் சிறிலங்கா தனது கடல்சார் எல்லை பாதுகாப்பில் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த அறிக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாகவே இராஜாங்கத் திணைக்களம் பட்டியலிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :