கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள்!

22.5.13கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.
நிதியியல் முதலாளித்துவ முறைமையும், கட்டமைப்பு ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட் முதலாளித்துவமும் இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது.
ஆனாலும் கார்பரேட் உயர் பீடங்களிற்கும் ஆட்சி அதிகார மையங்களிற்கும் இடையிலான முரண்பாடுகள், வேறொரு பரிமாணத்தை நோக்கி தள்ளப்படுகிறதா என்கிற விவாதங்கள் பரவலாக முன்வைக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும்.
இந்த கார்பரேட்டுக்களுக்கும், அதிகாரவாசிகளுக்கும் இடையே இணைப்புச் சக்தியாக விளங்கும் முகாமைத்துவ முதலாளித்துவமானது, எவ்வாறான புதிய தோற்றத்தை தனது பிம்பமாக, நடைமுறை சார்ந்து கட்டமைத்துக் கொள்ளும் என்கிற கேள்வியே தற்போது பரவலாக எழுப்பப்படுகிறது.
முதலாளித்துவ முறைமையின் படிமுறை வளர்ச்சியில் நிதியியல், முகாமைத்துவம் மற்றும் கார்பரேட் என்பவற்றின் வகிபாகம் முக்கியமானதாகக் கணிப்பிடப்படுகிறது.
உற்பத்தி, உபரி, மூலதன உருவாக்கம், வணிகம், வங்கி என்று நீண்டு செல்லும் முதலாளித்துவ கட்டமைப்பு, ஏதோவொரு நிலையில் கார்பரேட் முதலாளித்துவ (Corporate capitalism) முறைமையால் ஆக்கிரமிக்கப்படும் அல்லது அதுவாக மாற்றமடையும் நிலைநோக்கி நகரும்.
முதலாளித்துவ சந்தையானது, பன்னாட்டு கூட்டுத்தாபனங்களின் உயர்நிலை அதிகாரிகளின் ஆளுமைக்குள் ஆட்பட்டு இருக்கிறது. இவை வளர்ச்சியுற்ற நாடுகளின் அரைவாசிக்கு மேற்பட்ட வணிகங்களை கட்டுப்படுத்தும் வல்லமையைக் கொண்டிருக்கின்றன. பங்குச் சந்தையில் பங்குகளை வாங்குவதும், அதனை கூட்டுத்தாபனங்களில் முதலீடு செய்வதுமே இவர்களின் பிரதான தொழில்.
இத்தகைய கார்பரேட்டுக்களின் சந்தை ஆதிக்கமும் வளர்ச்சியும், அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்கும் அல்லது அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் வேகமாக நகர்வதைக் காண்கிறோம்.
ஏகாதிபத்தியத்தின் உருவாக்கம், வளர்ச்சி, அதன் உச்ச கட்டம் எவ்வாறு இயங்கியல் போக்கில் நகரும் என்பது குறித்து ,இரஷ்யப் புரட்சியின் ஸ்தாபகர் லெனின் அவர்கள் தனது அறிவியல் சார்ந்த சிந்தனையை முன்வைக்கும் போது குறிப்பிட்ட விடயங்களை அவதானித்தால், இப்போதைய கார்பரேட் முதலாளித்துவத்தின் ஏகபோகமே அதன் உச்ச நிலையாக இருக்குமா ? என்பது குறித்தான விவாதங்களை உருவாக்குகின்றது.
இக்கட்டமைப்பு உதிர்ந்து விடாமல் இருப்பதற்கு, பங்குச் சந்தையில் செயற்கையான வீழ்ச்சியை உருவாக்குவது, சீனாவிற்கு நகரும் நேரடி முதலீடுகளை தடுத்து, ஏகபோக கார்பரேட் நிறுவனங்கள் மையம் கொண்டுள்ள நாடுகளை நோக்கி நிதி மூலதனத்தை திருப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்குலகம் திட்டமிடுவதை புரிந்து கொள்ளலாம்.
இந்த மாற்றங்கள் குறித்து அரசறிவியலாளர்கள் கவலையடைகிறார்கள். சனநாயகக் கோட்பாட்டின் இருத்தலுக்கும், தனிமனித - சமூக உறவு நிலைக்கும் கார்பரேட்டின் ஏகபோகம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதுதான் அவர்களின் சமூக அக்கறையின் பாற்பட்ட வெளிப்பாடாக அமைகிறது.
தனிநபர் அல்லது ஒரு குழுவின் வளர்ச்சியானது, சனநாயக அரசொன்றினை விட பலமானதாக உருவாகி, அந்த அரசினையே கட்டுப்படுத்தும் வகையில் மாறுவது, பாசிசத்தை நோக்கி அந்நாட்டினை இட்டுச்செல்லும் என்கிற செய்தியினை பல முதலாளித்துவ சிந்தனையாளர்கள் முன்வைத்துள்ளனர்.
ஆனாலும், 1930களில் முன்வைக்கப்பட்ட எச்சரிக்கைகளைக் கடந்து, ஏகாதிபத்தியத்தின் உச்ச வடிவமாக கார்பரேட் முதலாளித்துவம் இன்று உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதன் இயக்கவியலைப் புரிந்து கொள்ளாமல், உலக ஒழுங்கின் அசைவியக்கத்தை தீர்மானிப்பது பொருத்தமற்றது.
சந்தைகளை விரிவுபடுத்த கார்பரேட்களால் உருவாக்கப்பட்டதே ,தாராளவாத பொருளாதாரக் கொள்கைத் திட்டம்.
இதனை உள்வாங்கிக் கொண்ட நாடுகளுக்கே பன்னாட்டு நிதி நிறுவனங்கள் உதவிகளை வழங்க முன்வந்தன.
இலங்கையில், மேற்குலக அணி சார்ந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்பாக, நாட்டின் வரவு-செலவு திட்டத்தினைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு அனைத்துலக நாணய நிதியத்தின் அரூபக்கரங்கள் இன்றும் தொழில்படுவதனை காண்கிறோம்.
59 பில்லியன் டொலர் மொத்த உள்ளூர் உற்பத்தியைக் கொண்ட (GDP) இலங்கையைப் பொறுத்தவரை, பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு அதிக அக்கறை இல்லை என்று சொல்லலாம். கடல் வழி அமைவிடம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தரிப்பிடம் என்பதைத் தவிர, தேயிலைக்கு அப்பால் உலகச் சந்தையில் போட்டியிடும் அளவிற்கு உற்பத்திகள் இங்கு இல்லை.
ஆனாலும், இலங்கையில் மேற்குலக கார்பரேட் மேலாதிக்கத்திற்கு எதிரான மாற்றுச் சக்தி தோற்றம் பெறக்கூடாது என்கிற அவதானமும் இவர்களிடம் காணப்படுகிறது. அத்தோடு, தேசிய இன முரண்பாடு பிரிவினைக்கு வழிவகுக்கக்கூடாது என்பது தொடக்கம், மேற்குலக கார்பரேட்டுக்களோடு சந்தை மோதலில் ஈடுபடும் ' பிரிக்ஸ்' அணியும் (BRICS) இங்கு கால் பாதிக்கக்கூடாது என்பது வரையான, தமது நலன்சார்ந்த எல்லாச் சாத்தியங்களையும் இது ஆய்விற்கு உட்படுத்துகிறது.
இங்கு குறித்துக் கொள்ள வேண்டிய விவகாரம் என்னவென்றால், அமெரிக்கா என்பது ஒபாமாவோ அல்லது ஜோன் கெரியோ அல்ல. அது கார்பரேட் உலகத்தால் சூழப்பட்ட ஒரு தேசம். இங்கு லாபமும், அதன் இருத்தலுமே முக்கியம்.
உழைப்புச் சுரண்டலிற்கான மனிதவளத்தின் தேவை கருதியே, ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை, பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிர்மாணித்தன. ஆட்சியாளர்கள் தமது புவிசார் நலனிற்கு முரணாக நிற்கும் போது, சலுகைகளை நிறுத்தி, அதே தொழிற்சாலைகளை பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு நகர்த்துவார்கள்.
ஐ.நா.வில் தீர்மானங்களையும் நிறைவேற்றுவார்கள். ஆனால் அவை, இலங்கையின் அரசியல் அமைப்பிற்கு முரண்படாதவாறு எழுதப்படும். ஆட்சி மாற்றம் ஏற்படும்வரை கால அவகாசமும் வழங்கப்படும்.
அதேவேளை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில், அவுஸ்திரேலியா, நியுசிலாந்து மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்வதாக விடுத்த அறிவித்தல், தனியே அரசியல் மட்டுமல்ல. மாறாக பொருண்மிய நலன் கொண்ட கார்பரேட்களின் அழுத்தங்களும் பின்புலத்தில் இருக்குமென்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.
மனித உரிமை மீறல் பற்றிப் பேசுவதோடு மட்டுமல்லாது நல்லாட்சி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், போர்க்குற்றம், மற்றும் உள்நாட்டு சுயாதீன விசாரணை குறித்து தீர்மானப்போர் நடாத்துவோர், திட்டமிட்ட வகையில் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுவதையிட்டு பேச மறுக்கின்றனர். பறிக்கப்பட்ட காணிகளை படைத்துறை மட்டுமல்ல பல நாட்டுக் கம்பனிகளும் பங்கு போடத் துடிக்கின்றன.
ஆகவே மாற்று அரசியல் தெரிவு ஒன்றிக்கான தேவை இங்கு எழுவதை நிராகரிக்க முடியாதுள்ளது. மேற்குலகின் பாதை ஒன்றே, இருக்கும் ஒரே வழி என்போரும், இலங்கை- இந்திய ஒப்பந்தமும் அதன் 13 வது திருத்தச் சட்டமுமே தவிர்க்க முடியாத தெரிவு என்போரும், இவ்விரு வல்லரசாளர்களின் நலனும் நோக்கமும் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
தப்பித்தவறி, இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரணில் அணியினர் ஆட்சியமைத்தால், மேற்குலகின் போக்கில் மாற்றம் ஏற்படுமா? சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற அழுத்தத்தை முன் வைக்குமா?.
இவ்வாறான பல கேள்விகள் நம்முன்னே எழுவது நிஜம். அப்போது, திரும்பவும் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று ஒரு தரப்பினரும், இது முதல்படி, இரண்டாம் படி, மெல்ல மெல்ல நகர்வோம் என்று சிலரும் சொல்வார்கள்.
ஆதலால் அடிப்படைக் கோட்பாட்டில் உறுதியாகவிருந்து உரையாடல்களையும், சந்திப்புக்களையும் மேற்கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.
அத்தோடு, கார்பரேட்களின் மேலாதிக்கத்தைப் புரிந்து, தேர்தல் எல்லைகளைக் கடந்த, பரந்துபட்ட வகையில், கோட்பாட்டில் தெளிவுள்ள முற்போக்கான ஐக்கிய முன்னணி ஒன்றினை தமிழ் பேசும் மக்கள் அமைப்பதுதான் சரியான பாதை என்று தெரிகிறது.
இதயச்சந்திரன்

0 கருத்துக்கள் :