சுவிஸில் புலிகளின் தாக்குதல் அணி; திவயின பரபரப்புத் தகவல்

27.5.13

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கச் செல்லும் இலங்கை அரசியல்வாதிகளைக் கொல்லும் திட்டத்தோடு புலிகளின் தாக்குதல் பிரிவான "ஹிட் ஸ்கொட்' அணி காத்திருக்கிறது என்ற ரகசியத் தகவல் சுவிஸ் பொட்போல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தியை கொழும்பில் இருந்து வெளியாகும் "திவயின' நேற்று தெரிவித்துள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புலிகளின் தாக்குதல் அணி அரசியல் வாதிகளைக் குறி வைத்து காத்திருப்பதால் ஜெனிவாவுக்கு செல்லும் இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைக்காக இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளையும் அவசரமான நிலையிலும் செயற்படக் கூடிய வெளிநாட்டு சாரதி மற்றும் குண்டு துளைக்காத வாகனம் என்பவற்றை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் உள்ள புலிகளுக்கு எதிரான குழுவே, சுவிஸில் நிலைகொண்டுள்ள புலிகளின் தாக்குதல் அணி குறித்த தகவல்களை சுவிஸ் பொலிஸாருக்கு வழங்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரின் போதும் இந்தத் தாக்குதல் அணி நிலை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கை அமைச்சர்கள் வழமையாகத் தங்கும் ஜெனிவாவில் உள்ள இண்டர்கொண்டிநேட்டல் என்ற விடுதிக்கு சென்ற புலிகளின் புலனாய்வாளர்கள் அமைச்சர்களின் பயணங்கள் குறித்த தகவல்களை திரட்டினர் என்றும் சுவிஸின் உயர்மட்ட பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன என்றுள்ளது.

0 கருத்துக்கள் :