கோதாபய ராஜபக்ஷ தன்னை உபஜனாதிபதியாக நினைத்து கொண்டு நாட்டை குழப்பக்கூடாது

26.5.13

கோதாபய ராஜபக்ஷ இன்று ஒரு அமைச்சின் செயலாளர்.  வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை. ஜனாதிபதியின் சகோதரர் என்ற ஒரே அந்தஸ்த்தின் காரணமாக கோதாபய தன்னை ஒரு உப ஜனாதிபதியாக உருவகித்து கொண்டுள்ளார். இதன் காரணமாகவே  அவர் இன்று வரம்பு மீறி பகிரங்கமாக அரசியல் பேசுகிறார்.
இவருக்கு நான் கடந்த மாதமே ஒரு பிரபல சிங்கள ஊடகம் மூலமாக ஒரு ஆலோசனை சொன்னேன். அதை மீண்டும் இப்போது சொல்கிறேன்.  கோதாபய ராஜபக்ச  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினாராக பதவி ஏற்கட்டும். அதன் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ஆகட்டும். அரசியலமைப்பை திருத்தி உப ஜனாதிபதியாககூட ஆகட்டும். அதுபற்றி நாம் கவலைப்பட  போவதில்லை. ஆனால் பாராளுமன்ற வாத விவாதங்களில் கலந்துகொண்டு பதில் சொல்லும் கடப்பாடு இல்லாத இடத்தில்  இருந்துகொண்டு அவர் அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட கூடாது என பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும்கூறியதாவது,   
வரையரையுடன்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரங்களே மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பையும், அதில் உள்ள 13ம் திருத்தத்தையும் வாசித்தால் இந்த உண்மை விளங்கும். அதற்கு மேலாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றத்தின் மேலாதிக்கமும் இருக்கின்றன. இந்த நிலையில், நாட்டின் அரசியலமைப்பை முறையாக வாசித்து புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு அல்லது வேண்டுமென்றே அதை திரித்து சொல்பவர்களுக்கு கௌதம புத்தனின் போதனைகள்தான்  ஞானோதயம் தர வேண்டும்
உண்மையில் மாகாணசபை அதிகாரங்கள் போதாது என்று தமிழ் அரசியல் கட்சிகள் சொல்கின்றன. மாகாணசபைகளை ஒரு ஆரம்பமாககூட ஏற்றுக்கொள்ள கூடாது என தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சாரார் கருதுகின்றார்கள். இந்நிலையில் இருப்பதையும் குறைக்கும் யோசனைகளை பகிரங்கமாக  விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர, பொதுபல சேனாவின் ஞானசார கலபொட தேரர் ஆகியோருடன் சேர்ந்து கோதாபய ராஜபக்சவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார். உண்மையில் இவர்கள் அனைவரையும் பின்னால் இருந்தபடி இவர்தான் தூண்டி விடுவதாக நாம் சந்தேகிகின்றோம்.
மக்களை பிழையாக வழி நடத்தும் இந்த முட்டாள்தனமான பிற்போக்கு கருத்துகளுக்கு நாம் பலமுறை பதில் சொல்லிவிட்டோம். இந்த கருத்துகள்தான் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தோன்ற காரணமாக அமைய போகின்றன.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பிரிப்பதன் மூலமே நாட்டு பிரிவினையை தவிர்க்க முடியும் என்பது இந்த நாட்டின் வரலாறு  எடுத்துக்காட்டும் படிப்பினை. அண்டை நாடு இந்தியாவின் வரலாற்றை பார்த்தும் இதை நாம் அறிந்துகொள்ள முடியும். வரலாற்றில் இருந்து பாடம் படிக்க முடியாத நபர்கள்தான், அதிகாரம் பகிர்வதை  எதிர்க்கிறார்கள். இவர்கள்தான் இந்த நாட்டில் இன்று உண்மையான பிரிவினை வாதிகள்.
கோதாபய ராஜபக்சவுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். அதற்கான உரிமை அவருக்கு இருக்கின்றது. ஆனால் அவர்  இன்று  ஒரு அரசாங்க அதிகாரி. இந்த பதவி நிலையை மறந்துவிட்டு  அவர் தொடர்ச்சியாக அரசியல் கருத்துகளை சொல்லிக்கொண்டே இருப்பது மக்களுக்கு தவறான செய்தியை வழங்குகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தேசிய பட்டியலில் தற்காலிகமாக பலர் இருக்கின்றார்கள். இவர்கள் ஒருவரது  பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொண்டு கோதாபய ராஜபக்ச பாராளுமன்றம்  செல்ல வேண்டும் என நான் விரும்புகின்றேன். அவர் பாராளுமன்றம் வர வேண்டும் என நான் சொல்ல முடியாது. ஏனென்றால் நான் அங்கு இல்லை.  இன்று பாராளுமன்றத்தில் சிறப்பான  எம்பீக்கள் இருக்கின்றார்கள். பாராளுமன்றம் சென்று தனது இந்த கருத்துகளை கோதாபய ராஜபக்ச  சொல்வாரானால், அவற்றுக்கு உரிய பதில்களை, அதிகார  பகிர்வை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வழங்குவார்கள்.
உண்மையில் கோதாபய ராஜபக்ச பாராளுமன்றம் சென்று பாதுகாப்பு அமைச்சையே பொறுப்பேற்று, பாதுகாப்பு அமைச்சராக முடியும். பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் பற்றிய வாதப்பிரதிவாதங்களில் பங்குபற்ற முடியும். இதை செய்யாமல் தான் மட்டுமே பங்குபற்றும் அரசாங்க ஊடகங்களில் தோன்றி கருத்துகள் கூறுவதையும், பாதுகாப்பு அமைச்சு நிகழ்வுகளில் அரசியல் கருத்துகளை சொல்வதையும் கோதாபய ராஜபக்ச நிறுத்த வேண்டும்.

0 கருத்துக்கள் :