முள்ளிவாய்க்கால் முடிவல்ல:மகிந்த சிந்தனையும் தேசியத் தலைவரின் சிந்தனையும்

24.5.13
முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை மகிந்தவுக்கும் சிங்களப் படைகளுக்கும் தெளிவாக எடுத்தியம்பியுள்ளனர்.

தமிழீழத் தேசியத் தலைவரையும் அவரது படைகளின் ஆற்றல் ஆளுமைகளையும் கண்டு அச்சமடைந்த மகிந்தவும் அவரது படைகளும் உலக நாடுகளில் போய் இரந்து பெற்று வந்த இரசாயன ஆயுதங்களையும் வல்லரசு நாடுகளில் உள்ள இராணுவப்படைத் தளபதிகளின் தொழில்நுட்ப வழிகாட்டல்களையும் பெற்றுவந்து வன்னியில் வைத்து எமது மக்களைக் கொன்று குவித்தனர்.
ஆனால், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைகளையும் செயல்களையும் சிங்களத் தரப்பால் இன்றுவரை வெற்றிகொள்ள முடியவில்லையென்பதை தமிழ் மக்கள் தெளிவாகவே சிங்களத்திற்கு உணர்த்தியிருக்கின்றனர். முப்பது வருடங்களாக இலங்கைத்தீவை ஆட்சி செய்த எமது தலைவர் பிரபாகரன் அவர்களே இன்றும் இலங்கைத் தீவை ஆட்சி செய்கிறார் என்பது கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுடன் சிறீலங்காப் படைகளுக்கும் மகிந்த குடும்பத்திற்கும் நன்றாகவே புரிந்திருக்கும்.
ஈழத்தமிழர்கள் தனித்து விடப்பட்டவர்கள். இவர்களை நாங்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம். அடிக்கலாம். உதைக்கலாம். கொலைசெய்யலாம். கிடங்கு வெட்டி உயிருடன் புதைக்கலாம். நாங்கள் செய்வதைக் கேட்க யாருமில்லை என்ற மகிந்த குடும்பத்தின் கற்பனைகளுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஆப்பு வைப்பதாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர்கள் தனித்தவர்கள் அல்ல. அவர்களுக்கு அடித்தால் உலகம் ஆர்ப்பரித்து எழுந்து வரும் என்பதை உலகத்தின் மூலை முடுக்கெங்கும் உள்ள தமிழ் மக்கள் நிரூபித்துள்ளனர். தமிழர்களுக்கு அப்பால் உலகின் பல நாடுகளிலும் உள்ள ஏனைய சமூகத்தவர்களும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் கலந்துகொண்டுள்ளமை ஈழத் தமிழருக்கு பெரு வெற்றியாக அமைந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஈழத் தமிழர்களைத் துன்ப துயரங்களுக்குள் தள்ளிய மகிந்த ராஜபக்சவும் அந்த அயோக்கியனின் படைகளும் ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவித்துவிட்டு பெற்றுக்கொண்ட வெற்றியை எதிரி நாட்டை வெற்றிகொண்டதைப் போன்று பறைசாற்றின.

சொந்த நாட்டு மக்களுடன் எதிர்நின்று சமர் புரிந்து வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாத மகிந்தவின் சிங்களப் படைகள் உலக நாடுகளில் பெற்றுவந்த எரி குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் தமிழர்களின் தலைமேலே கொட்டி அவர்களை எரித்தழித்த தினத்தை யுத்த வெற்றித் தினமாக பிரகடனப்படுத்தி வருடா வருடம் கொண்டாடி வருகின்றன.
பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகள் காலணித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற தினத்தைக் கொண்டாடும் போது தமது படைபலத்தையும் படைக்கலங்களின் பலத்தையும் காட்சிப்படுத்துவதே வழக்கமாக இருந்து வருகின்ற நிலையில், சிறீலங்கா அரசாங்கமானது தனது சொந்த நாட்டு மக்களில் ஒரு இலட்சம் வரையான மக்களைக் கொன்று குவித்த தினத்தை தனது தேசிய வெற்றித் தினமாகக் கொண்டாடி வருகின்றது.
உலகின் ஏனைய நடுகளுடன் ஒப்பிடுகின்ற போது மகிந்தவின் இந்தச் செயலானது உண்மையிலேயே வெட்கப்பட
வேண்டியது. சிறீலங்காவின் தென்பகுதியில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில் தமிழர் தாயகம்  எங்கணும் இந்த வருடமும் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. வன்னியில் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு தமிழர் தாயகமெங்கும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகின்ற நிலையில் நான்காவது வருடமாகிய இந்த வருடம் மிகவும் வித்தியாசமான முறையில், மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.
உயிரிழந்த மக்களுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ அஞ்சலி செலுத்துவோர் கைது செய்யப்படுவார்கள் என்று வன்னி மாவட்ட சிறீலங்காவின் படைக் கட்டளைத் தளபதி பொணிபஸ் அறிவித்திருந்த நிலையிலும், யாழ். மாவட்டம் உட்பட தமிழர் தாயகம் முழுவதும் படையினரின் சோதனைகளும் ரோந்துகளும் கெடுபிடிகளும் அதிகமாக்கப்பட்டிருந்த நிலையிலும், யாழ். பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் எதனையும் பொருட்படுத்தாத மக்களும் மாணவர்களும் தமிழர் தாயகம் எங்கும் எமது உறவுகளுக்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
படையினர் முற்றத்தில் நிலைகொண்டிருந்த போதிலும் உள்வீட்டில் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய வீரம் இந்தத் தடவைதான் தாயகத்தில் ஏற்பட்டிருக்கிறது. உண்மையிலேயே இந்த வருடம் மக்கள் பெரும் எழுச்சியடைந்திருக்கிறார்கள். எதற்கும் அஞ்சாத துணிவோடு எழுச்சியடைந்திருக்கிறார்கள். இந்த எழுச்சியானது சாதாரணமானதன்று. மக்கள் மீண்டும் துணிவோடு புறப்பட்டுவிட்டார்கள் என்பதையே இந்த எழுச்சி புலப்படுத்துகிறது. தங்கள் தலைகளில் இனிமேல் யாரும் மிளகாய் அரைக்க முடியாது என்பதை தமிழ் மக்கள் இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூலமாகத் தெரியப்படுத்தியிருக்கிறா£ர்கள்.
ஈழத் தமிழ் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களும் இந்தியாவிலுள்ள தமிழ் மக்களும் இந்த வருடம் என்றுமில்லாதவாறு எழுச்சியடைந்துள்ளார்கள். இதிலும் தமிழக அரசியல்வாதிகளும் தமிழ் உணர்வாளர்களும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவை மிக உணர்வுபூர்வமாகவே நினைவுகூர்ந்துள்ளனர். இந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழின விடுதலை மிக விரைவாகவே எட்டப்படும் என்ற நம்பிக்கை இந்த மக்களிடையே துளிர்த்திருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அது புதிய ஆரம்பம் என்பது ஒரு அர்த்தமற்ற வார்த்தையாகவே நோக்கப்பட்டது. ஆனால், இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மூலமாக அந்த வார்த்தையின் அர்த்தம் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்க்காலுடன் எல்லாமே முடிந்துவிட்டது. ஈழத்தமிழர்களின் போராட்டம் கூட முள்ளிவாய்க்காலுக்குள் புதைக்கப்பட்டுவிட்டது என்றே சிங்களம் உட்பட அனைவரும் கருதினார்கள். இந்தப் பாடத்துடன் தமிழன் படுத்துவிடுவான். இனிமேல் அவன் நிமிர்ந்தெழ முடியாது என்று சிங்களம் கனவு கண்டது.
ஆனால், தமிழீழத் தேசியத் தலைவரும் போராளிகளும், ‘எமது கல்லறைகளில் புற்கள் முளைக்காது, புதிய போராளிகள் முகிழ்த்தெழுவார்கள்’ என்று கூறியதைப் போல இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவுடன் புதிய போராட்ட அத்தியாயம் ஒன்று முகிழ்த்துள்ளது. அதுதான் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டம். மக்கள் புரட்சி வெடித்தாலே நாம் சுதந்திரத் தமிழீழத்தை அமைக்க முடியுமென்று தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்கள் கூறியிருந்தார்கள். அது போன்று இப்போது மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது. ஈழத்தில் மட்டுமல்ல, உலகம் பூராக மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது. இதன் மூலம் சுதந்திர தமிழீழத்திற்கான வாசல் திறக்கப்பட்டிருக்கிறது.
இஸ்ரவேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற சுதந்திரப் போராட்டமும் சிறீலங்காவிற்கு எதிராக தமிழீழத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டமும் உலகப் போராட்ட வரலாற்றில் சிறப்பாகப் பேசப்படுகின்றன. அதிலும் தமிழீழப் போராட்ட முறைகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட யுக்திகள் குறித்தும் வியந்து பேசப்படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த திறமை. அஞ்சாத துணிவு. இழப்புகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து போரிடும் ஆற்றல். இந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? அது எங்கே தங்கியிருக்கிறது? போராட்ட மௌனிப்போடு அந்த ஆற்றல், ஆளுமைகளும் மௌனித்துவிட்டனவா? இல்லை இல்லை. தமிழருக்கு என்று சிறப்பாக இருக்கின்ற ஆற்றல், ஆளுமைகளும் வீரமும் உலகில் எந்த இனத்திற்கும் இல்லை. புலிகளிடமுள்ள போர்க்குணம் என்றுமே மாறப்போவதில்லை. தமக்கு இரை கிடைக்காவிட்டால் உரிய இரை, பெரிய இரை தன்னைத் தேடி வரும்வரை புலி பதுங்கியிருக்கும் என்பது வன ஆராய்ச்சியாளர்கள் புலியைப் பற்றி ஆராய்ந்து கூறிய முடிவு. அதேபோல்தான், தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் சாதாரணமான காரியங்களுக்கு எல்லாம் அவர்கள் மண்டையைப் போட்டு உடைப்பதில்லை. உரிய காலம் வரும் வரை அவர்கள் அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள். இந்த அமைதியைப் பார்த்து சிங்களம் போரில் புலிகளை வென்றுவிட்டோம் என்று எக்காளத்தொனி எழுப்புகிறது. ஆனால், இது அவர்களுக்கோ அவர்களின் மக்களுக்கோ நல்லதல்ல.
போர் என்றால் வெற்றி தோல்வி வருவது சகஜம். தமிழ்த் திரைப்படங்களில் கூறுவதைப் போல ‘சண்டை என்றால் சட்டை கிழியும் தான்.’ அதற்காக கிழிந்த சட்டையைத் தொடர்ந்து அணிந்துகொண்டு திரிய முடியாதே. என்றோ ஒரு நாள் சட்டையைத் தைப்பதற்கு முயலத்தானே வேண்டும். சட்டையைத் தைப்பதற்கு முயன்று முடியாவிட்டால் புதிய சட்டையை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழர்களின் நிலையும் இன்று இது போலத்தான் இருக்கின்றது. சண்டை வந்தது. சட்டை கிழிந்துவிட்டது. தைப்பதற்கு முயன்றார்கள். முயல்கிறார்கள். முடியாவிட்டால் புதிய சட்டையைக் கொள்வனவு செய்ய வேண்டும். எமது போராட்டத்தை புதிய வழியில் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் துணிந்துவிட்டார்கள்.
தமிழர்களும் தமிழீழப் போராட்டமும் புதைக்கப்பட்டுவிட்டதாக மகிந்தவும் மகிந்தவின் படைகளும் நம்பிக்கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்கள் சென்று இந்த வருடம் அங்கு உறங்கிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள். சிங்களம் இதனைச் சற்றேனும் எதிர்பார்த்திருக்காது. தமிழன் மீண்டும் துணிந்து எழக்கூடாது என்று கருதிய சிங்களத்தின் மனங்களில் தமிழரின் மீளெழுச்சியானது இடியாக அமைந்துள்ளது. யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று வரை புலம்பெயர் தமிழ் மக்களின் எழுச்சியைக் கண்டு அஞ்சி நின்ற மகிந்த அரசாங்கம் இப்போது தாயகத்திலேயே தமிழ் மக்களின் எழுச்சியைக் கண்டு அச்சமடையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சம் மகிந்த குடும்பத்தை அமைதியாக இருக்கவிடப்போவதில்லை.
இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழ் மக்களும் இந்திய வாழ் உறவுகளும் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். போராட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பெரும் அச்சத்துடன் வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு உங்கள் எழுச்சியே மீள் பலத்தைக் கொடுத்தது. ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நீங்கள் அங்கே நடத்திய போராட்டங்களும் எழுச்சி நிகழ்வுகளுமே இங்கே இவர்களையும் எழுச்சியடையச் செய்தது. இனி நாங்களும் எழுச்சியடையாவிட்டால் நாங்கள் அடக்கப்படுவோம் என்ற உணர்வு ஈழத் தமிழ் மத்தியில் மேற்கிளம்புவதற்கு காரண கர்த்தாக்களாக இருந்தவர்கள் நீங்கள் தான் என்பதை நீங்கள் பெருமையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.
இனிவரும் காலங்களிலும் சிங்கள அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து ஈழத் தமிழ் மக்கள் விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் உறுதியான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதையே இன்று ஈழத் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். இவர்களின் உறுதியான எதிர்பார்ப்பை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.
இந்ந வருடம் புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்காக நீங்கள் எழுச்சியடைந்தமையாலேயே ஈழத்தில் தமிழர் தாயகமான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய அனைத்து இடங்களிலும் வாழ்கின்ற மக்களும் இந்த நினைவு தினத்தைக் நினைவு கொள்ளத் துணிந்தனர். எனவே, எதிர்காலத்திலும் நீங்களே ஈழத் தமிழ் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் காவலர்களாகவும் இருக்க வேண்டும் என்றே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். இந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்து ஈழத்தில் தமிழர் தாயகமான தமிழீழம் மலர்வதற்கு உங்கள் ஒத்துழைப்பு என்றைக்குமே இருக்க வேண்டும். உங்கள் ஒத்துழைப்புடன் நிச்சயம் தமிழீழம் மலரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

0 கருத்துக்கள் :