பாகிஸ்தான் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி அமோக வெற்றி

12.5.13


பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த 66 ஆண்டு கால வரலாற்றில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட எந்த அரசும் 5 ஆண்டுகள் நீடித்தது கிடையாது. கடந்த 2008 தேர்தலில் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றது. பிரசாரத்தில் பெனாசிர் கொல்லப்பட்டதால் அவரது கணவர் சர்தாரி அதிபர் பொறுப்பேற்றார். 5 ஆண்டுகள் ஆட்சியை பூர்த்தி செய்தார். முதன் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 5 ஆண்டுகள் பூர்த்தி செய்ததுடன் பாராளுமன்ற தேர்தலையும் நடத்தியதால் இது வரலாற்று சிறப்புமிக்க தேர்தலாக உலக நாடுகள் கவனத்தை ஈர்த்தது. பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி, நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி, இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்சாப் கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 272 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. தீவிரவாதிகளின் கடும் மிரட்டலுக்கு இடையே ஒட்டுப்பதிவு நடந்தது. என்றாலும் பாகிஸ்தானில் 4 இடங்களில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 16 பேர் பலியானார்கள். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. இதில் 60 சதவீதம் வாக்குகள் பதிவானது. கடந்த தேர்தலில் 44.5 சதவீத ஓட்டுகளே பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனே ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பெருவாரியான இடங்களில் முன்னணியில் இருந்தது. நள்ளிரவு வரை ஓட்டுகள் எண்ணப்பட்டதில் நவாஸ் செரீப் கட்சிக்கு 110 இடங்கள் கிடைத்தது. இன்று காலையில் 263 தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இதில் நவாஸ் செரீப் கட்சிக்கு 130 இடங்கள் கிடைத்தன. ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த கட்சிக்கு 35 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ-இன் சாப் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. 2-வது இடத்துக்கு முன்னேறியது. சிறிய கட்சிகள், சுயேச்சைகள் 61 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 137 இடங்கள் தேவை. நவாஸ்செரீப் கட்சிக்கு தனி மெஜாரிட்டிக்கு 7 இடங்களே தேவைப்படுகிறது. இன்னும் 9 தொகுதி முடிவுகள் மட்டுமே வரவேண்டும். எனவே நவாஸ் செரீப் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிறது. தேர்தல் முடிவுகள் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதன்பிறகு நவாஸ்செரீப் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். நவாஸ் செரீப் கட்சி தற்போது 3-வது முறையாக பாகிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ளது. ஏற்கனவே 1990 முதல் 1993 வரையும், 1997 முதல் 1999 வரையும் 2 தடவை பிரதமர் பதவி வகித்துள்ளார். இரு முறையும் அவர் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டு வரை மட்டுமே பிரதமர் பதவி வகித்தார். 1999-ல் நவாஸ்செரீப் பிரதமராக இருந்தபோது அவரது ஆட்சியை கவிழ்த்து விட்டு ராணுவ தளபதி முஷரப் ஆட்சியை கைப்பற்றினார். ராணுவ சர்வாதிகாரியாக இருந்த முஷரப் அதன்பிறகு ஜனாதிபதியாக பிரகடனம் செய்து கொண்டு ஆட்சியில் நீடித்தார். முஷரப்பின் நெருக்கடி காரணமாக பெனாசிர் பூட்டோ, நவாஸ் செரீப் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறினார்கள். கடந்த முறை தேர்தலை சந்திக்க வந்தபோதுதான் பெனாசிர் கொல்லப்பட்டார். இதேபோல் பதவி இழந்த முஷரப் மீதும் வழக்குகள் தொடரப்பட்டதால் நாட்டை விட்டு வெளியேறி துபாயில் தஞ்சம் புகுந்தார். தேர்தலை சந்திப்பதற்காக அவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பினார். அவர் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவை நிராகரிக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு நவாஸ் செரீப் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இவர் பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி ஜியா-உல்-ஹக்கின் ஆதரவாளர் ஆவார். தொழில் அதிபராக இருந்த நவாஸ் செரீப்பை, ஜியா அரசியலுக்கு கொண்டு வந்தார். 1985-ம் ஆண்டு பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக இவரை ஜியா நியமித்தார். ஜியா விமான விபத்தில் மரணமடைந்ததும் நவாஸ்செரீப் கட்சி தலைவர் ஆனார். அதன்பிறகு நடந்த தேர் தலில் பெனாசிர் ஆட்சியை பிடித்து பிரதமர் ஆனார். நவாஸ் செரீப் 2-வது இடத்தை பிடித்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார். ஊழல் புகார் காரணமாக பெனாசிர் 1990-ல் ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டதும் நவாஸ் செரீப் பிரதமர் ஆனார். அவர் முதல் 3 ஆண்டுகளே பிரதமராக நீடித்தார். ஊழல் குற்றச்சாட்டில் நவாஸ் செரீப்பும் நீக்கப்பட்டார். தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு நவாஸ் செரீப் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார். 3 தொகுதியில் போட்டியிட்ட பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் 3 தொகுதியிலும் படுதோல்வி அடைந்தார். நவாஸ் செரீப் 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். 4 தொகுதிகளில் போட்டியிட்ட இம்ரான்கான் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தார்.

0 கருத்துக்கள் :