இலங்கை அமைச்சருக்கு சுவிட்சலாந்தில் கவச வாகன பாதுகாப்பு! புலிகள் அச்சுறுத்தல்?

22.5.13


மூன்று மேல்மட்ட கூட்டங்களில் கலந்து கொள்ள சுவிட்சலாந்தின் ஜெனீவா நகருக்கு சென்றுள்ள இலங்கை சுகாதாரத்துறை அமைச்சருக்கு, சுவிட்சலாந்து அரசு திடீரென சிறப்பு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த பாதுகாப்பில், கவச வாகனமும் அடக்கம்! ஆனால், எதற்காக திடீரென தமக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது, அமைச்சருக்கே புரியவில்லை! உலக சுகாதார அமைப்புகளின் (The World Health, G-15, and Commonwealth Mental Health Conventions) கூட்டங்களே ஜெனீவாவில் தற்போது நடக்கின்றன. இதில் பல்வேறு நாடுகளின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டங்களில் கலந்துகொள்ள வந்துள்ள வேறு எந்தவொரு நாட்டு சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஆனால், இலங்கை அமைச்சருக்கு மட்டும், சாதாரண பாதுகாப்பைவிட மிக அதிகமாக, கவச வாகன பாதுகாப்பு வழங்கியுள்ளது, சுவிட்சலாந்து பாதுகாப்புத்துறை! இவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுக்கவும் இல்லை! தமக்கு கிடைத்த ‘ஏதோ’ உளவுத் தகவல்களின் அடிப்படையில், இந்த சிறப்பு பாதுகாப்பை செய்துள்ளது சுவிட்சலாந்து! இது தொடர்பாக இலங்கை அமைச்சரை கேட்டபோது, “இந்தப் பாதுகாப்பு எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விடுதலைப் புலிகள் சுவிட்சலாந்தில் என்மீது தாக்குதல் நடத்துவார்கள் என்று இலங்கை உளவுத்துறைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை” என்றார்! கவச வாகனப் பாதுகாப்பு வழங்கப்படுவது, வெடிகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்குதான்! என்னங்க நடக்கிறது? சுவிட்சலாந்து உளவுத்துறைக்கு ‘ஏதோ’ தெரிந்திருக்கிறதா?நன்றி விறுவிறுப்பு

0 கருத்துக்கள் :