பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம்! திறக்கசொல்லி குடிமகன்கள் சாலை மறியல்

13.5.13

திண்டுக்கல் நகரில் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி கடைக்கு பூட்டு போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் நகரின் 25வது வார்டு மேட்டுப்பட்டி சாலையில், குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மது அருந்தியவர்கள் அந்த வழியே செல்பவர்களிடம் தகராறு செய்வதால், மாணவர்களும் பெண்களும் அந்த வழியே நடமாட அச்சப்படுகின்றனர். மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறும் அந்தப் பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டிக்கும் வகையில் மதுக்கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மதுபானக்கடையை திறக்க வலியுறுத்தி பெண்களுக்கு எதிராக ஆண்கள் சாலை மறியல்! போலீசார் பஞ்சாயத்து!

மூடப்பட்ட மதுபானக்கடையை திறக்க வலியுறுத்தி ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே மூலக்கடை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. இந்த கடையினால் வீட்டுகளில் பலபிரச்சினைகள் ஏற்பட்டன, இதனால் இக்கடையை அடைக்கவேண்டும் என கூறி பெண்கள் கடந்த வாரம் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கடையை பூட்டி பெண்களிடம் சாவியை ஒப்படைத்தனர்.

இந்நிலையில் இன்று மதுபானக்கடையை திறக்கவலியுறுத்தி மூலக்கடை-கடமலை சாலையில் ஆண்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், அரசு மதுபானக்கடையை மூடிவிட்டதால், மதுபானம் அருந்த 6 கிலோ மீட்டர் செல்லவேண்டியுள்ளது. அங்கு மதுஅருந்திவிட்டு வாகனத்தில் வந்தால் போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். மேலும் வாகனத்தில் வரும் போது விபத்தில் சிக்கி வருகிறோம் என்று போலீஸாரிடம் முறையிட்டனர்.

இதனைகண்டு சிரித்த போலீஸார் மறியலில் கைவிடுங்கள் என்று கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் கூறியதாவது: கடந்த வாரம் பெண்கள் மதுபானக்கடையை  திறக்க வேண்டாம் என்று மறியலில் ஈடுபட்டனர். தற்போது நீங்கள் கடையை திறக்கவேண்டும் எனறு மறியலில் ஈடுபடுகின்றீர்கள். இது குறித்து இருதரப்பினரிடையே ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என கூறினார்கள்.

0 கருத்துக்கள் :