அஞ்சலி செலுத்தக் கூடும்; யாழ். பல்கலைக்கழக சூழலில் பாதுகாப்பு தீவிரம்

18.5.13

யாழ். பல்கலைக்கழகத்தில் அஞ்சலி செலுத்தக் கூடும் என்ற சந்தேகத்தில் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரே இவ்வாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்திலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களினால் நேற்றைய தினம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேற்று இரவு முதல் யாழ். பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியும் வளாகத்திற்கு உள்ளும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நினைவு நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ'டிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வவுனியா நகர சபைத் தலைவர் ரதன் தலைமையில் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இன்று வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகள் வவுனியா நகர சபை மண்டபத்தில் காலை 10 மணிக்கும் கிளிநொச்சி அறிவகத்தில் இன்று காலையும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று 5 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :