இனித் தொடர் போராட்டம் காணாமற் போனோர் உண்மையறிய

20.5.13

காணாமற் போனோர் பற்றிய உண்மையான விவரங்களை வெளிப்படுத்துமாறு கோரி, காணாமற் போனோரின் உறவினர்கள் நாடளாவியரீதியில் தொடர் போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.இவ்வாறு தெரிவித்துள்ளார் காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரம்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் போர்க் காலத்தில் பலர் கடத்தப்பட்டு காணாமற் போயினர். அத்துடன் போரின் இறுதிக் கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த பலரின் நிலைமை இதுவரையில் என்னவென்பது தெரியாது.இவர்களது உறவினர்களை ஒன்று சேர்த்து தொடர் போராட்டங்கள் நடத்துவதன் மூலமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும். எனவே இலங்கையில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், காணாமற்போனோர் தொடர்பான அமைப்புக்கள் என்று 50 இற்கும் மேற்பட்ட அமைப்புக்கள், கொழும்பு மருதானை சமூக சமய நடுநிலை மன்றத்தில் அண்மையில் ஒன்று கூடி தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும் முடிவை எடுத்துள்ளன.இதனடிப்படையில் ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒரே சமயத்தில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் காணாமற்போனோர் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.அத்துடன் காணாமற்போனோர் தினம் ஒன்றை அனுஷ்டிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  என்றார். காணாமற்போனோர் என்று எவரும் இலங்கையில் இல்லை என்று ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார். இதன் பின்னரே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :