இலங்கையில் தமிழர்கள் - பலியாக்கப்பட்ட ஒரு மக்கள்

25.5.13

இலங்கையில் 30 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த கோரமான யுத்தத்தின் பின்னர், 2009ம் ஆண்டில் தமிழ்ப் போராளிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டார்கள்.

மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான பல சர்வதேச அமைப்புக்கள் இந்த யுத்தத்தின் இறுதி மாதங்களில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளன.
இந்த இரத்தம் தோய்ந்த கோர யுத்தம் கூட சிறீலங்காவில் தமிழர்களுக்கெதிரான அடக்குமுறையை துரதிஷ்டவசமாக முடிவிற்குக் கொண்டு வரவில்லை. ஆனால் தமிழ்ப் போராளிகள் மீதும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டது.
செவிட்டுத்தனமான அமைதியை சர்வதேசம் கடைப்பிடித்தபோது, லு மொந்த் (Le Monde) பத்திரிகையில் ‘உள்நாட்டுப்போரில் பாதிக்கப்படுபவர்கள் அவர்களின் கொடூர நிலைகளுக்கு முன்னால் கூட சர்வதேசத்தால் சமமாகப் பார்க்கப்படுவதில்லை’ என்று குறிப்பிட்டிருந்தது. இதையே சர்வதேசத்தின் மௌனம் எமக்குக் காட்டி நின்றது. 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் வடக்குக் கிழக்கிலிருந்து 130 கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து மதகுருக்கள் ஐ.நா. சபையை நோக்கி ‘தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டு விடுவதற்குள் நடவடிக்கை எடுங்கள்’ என ஒரு கோரிக்கையை எழுப்பினார்கள்.

இலங்கையின் நிலைமை
இலங்கையின் இனப்பிரச்சினை மிக ஆழமான வரலாற்றை உடையது. முன்னைய பிரெஞ்சுப் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்ந்த, வரலாற்றியலில் கலாநிதிப் பட்டம் பெற்றவரும் பிரெஞ்சு மொழி ஆசிரியருமான ஜோன் மரி ஜுலியா அவர்கள் 2000ம் ஆண்டில் எழுதிய தனது சிறீலங்காவில் தமிழினப் படுகொலை (‘Le génocide des Tamouls à Sri Lanka’) என்ற புத்தகத்தில் ‘வடக்குக் கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் கல்லறை பூமிகளாவதாக’ மிகவும் உருக்கமாகவும் விளக்கமாகவும் எழுதியிருந்தார்.
பல்லாண்டுகளாக ஒடுக்கப்பட்ட தமிழினம் தம்மைக் காத்துக்கொள்ள இறுதியில் ஆயுதம் ஏந்தியது. அது ஒரு கொடூர உள்நாட்டு யுத்தமாக மாறியது. பல தசாப்த மோதல்களின் பின்னர் விடுதலைப் புலிகள் சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டனர். இது இந்த யுத்தத்தின் அடிப்படையை அப்படியே மாற்றிப்போடத் தொடங்கியது.
வான்படை, நீர்மூழ்கிப்படைகள் கொண்டதாக அறியப்படும் விடுதலைப் புலிகள் உலகத்திலேயே மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். உலகிலேயே மிகவும் நல்லொழுக்கம் கொண்ட அமைப்பாகும்.
ஆனாலும் இந்த மிகவும் ஒழுக்கம் வாய்ந்த அமைப்பு சர்வதேச அரசுகளின் உதவியுடன் தோற்கடிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்திற்கு இவர்கள் பற்றி மிகவும் மோசமான தப்பபிப்பிராயத்தை  சிறீலங்கா ஏற்படுத்தியது. கடாஃபியின் நண்பர்கள் என்றும் சோமாலியாக் கடற்கொள்ளைக்காரர்களின் கூட்டு என்றும் காட்டப்பட்டது.

ஒரு மக்கள் சமூகம் சர்வதேச சமூகத்தினால் கைவிடப்பட்டது.
தமிழர்களுக்கெதிரான யுத்தம் நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னால், கடந்த நவம்பர் 2012 இல், ‘2009 இல் படுகொலையின் போது மக்களைக் காக்கும் தகைமை தங்களிடம் இருந்திருக்கவில்லை’ என முதன்முறையாக ஐ.நா. தமது மனச்சாட்சியை வெளிப்படுத்தி உள்ளது. ‘யுத்தத்தின் ஆரம்ப எச்சரிகைகளிற்குப் பதில் அளிக்க முடியாத, பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலைகளைத் தடுக்க முடியாத ஐ.நாவின் பாரிய தோல்வி, மற்றும் சிக்கலான முறைமைகளில் செயற்பாடின்மையால் படுகொலைகளைத் தடுக்க முடியாத தகுதி இன்மை’ போன்றவற்றை ஆராய ஓர் ஆணையத்தைப் பான் கீ மூன் ஏற்படுத்தி உள்ளார்.
சிறீலங்காவின் இறுதித் தமிழினப் படுகொலையின் போது ஐ.நா அதிகாரிகள் பலர் இனப்படுகொலைகளைத் தடுப்பது தங்களது வேலையல்ல என்ற மனப்பாங்கிலேயே இருந்ததை அதிகாரபூர்வ அறிக்கைகளை ஆதாரம் காட்டி ‘லு மொந்த்’ பத்திரிகை வெளியிட்டிருந்தது.
இறுதிக்கட்ட தமிழினப் படுகொலை நடந்தவேளை ஐ.நா சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்புகளையோ அவர்களின் படுகொலைகளையோ முற்றிலுமாக மறைத்துக் கொண்டு தீவிரமான குற்றச்சாட்டுகளை விடுதலைப் புலிகள் மீது மட்டுமே சுமத்திய வண்ணம் இருந்தனர். நாம் தொடர்பு கொண்டு பேசிய ஐ.நா அதிகாரி, தாம் சிறீலங்காவில் செயற்பட அனுமதிப்பதற்காக சிறீலங்காவின் படுகொலைகளைப் பற்றி எதுவும் சொல்லாது இருந்ததாகக் கூறினார்.
ஆனாலும் ஐ.நாவிற்கு என்றைக்குமே யுத்தப் பகுதிக்குள்ளோ அல்லது மக்கள் பாதிக்கப்பட்ட பிரச்சனைப் பகுதிக்குள்ளோ செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இது சர்வதேச சமூகத்திற்கு ஒரு பாரிய தோல்வி!.
இந்திய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் ஊடாக 2009ம் ஆண்டில் நடந்த  சிறீலங்காவின் போர்க் குற்றங்களை விசாரிக்க ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இந்த விசாரணைகளிற்கான ஆரம்பம் 21ம் நு£ற்றாண்டின் வரலாற்று மாற்றமாக மனிதத்திற்கெதிரான குற்றவாளிகளும் போர்க்குற்றவாளிகளும் தண்டிக்கபடக் கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்கும் எனத் தெரிகின்றது.
இந்த நடைமுறை இடைவிடாது தொடரப்பட்டு நீதி பெறப்படல் வேண்டும். பொது மக்களுக்கெதிரான அண்மைக்காலப் படுகொலைகளும் அராஜகங்களும் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக மிக மிக அவசரமாக  இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்

0 கருத்துக்கள் :