மீண்டும் சிறீதரன் எம்.பி விசாரணைக்கு அழைப்பு

2.5.13

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீண்டும் குற்றத்தடுப்பு புலனாய்வுத்துறையினரினால் விசாரணைகளுக்கென கொழும்புக்கு அழைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், இன்று பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு புலனாய்வுத் துறையினர் சென்று விசாரித்ததாகவும் அறியமுடிகின்றது.
நேற்றைய தினம் மாலை 3 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குச் சென்ற குற்றத்தடுப்பு புலனாய்வுத் துறையினர் பாராளுமன்ற உறுப்பினர் எங்கே? அவரிடம் சில தகவல்களை நாங்கள் பெறவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியிடம் விசாரித்துள்ளனர்.
எனினும், அவர் பணி நிமித்தம் வெளியே சென்றிருக்கின்றார். அவர் தற்போது வீட்டில் இல்லை அவரது மனைவி கூறியவுடன் பாராளுமன்ற உறுப்பினரின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டு புலனாய்வாளர்கள் வெளியேறியுள்ளனர்.
அவர்கள் சென்றதன் பின்னர் மாலை 3 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு கொண்ட குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் கிளிநொச்சியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒன்று தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதற்கான ஆவணங்கள் எங்களிடமிருக்கின்றது. எனவே இன்று சந்திக்க வேண்டும் எனக்கேட்டிருக்கின்றனர். எனினும் அதற்கு மறுப்புத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இன்று உடனடியாக சந்திக்க முடியாது. நான் பணி நிமித்தம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன்.
8 ம் திகதி பாராளுமன்ற அமர்வுகளுக்காக கொழும்பு வரும்போது வேண்டுமானால் சந்திக்கலாம் என கூறியுள்ளார். இதனையடுத்து, அவர்கள் தொலைபேசியை துண்டித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஏற்கனவே 3 தடவைகள் இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவருடைய அரசியல் செயற்பாடுகளை முடக்குவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் 4 வது தடவையாகவும் அவர் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருக்கின்றார். இம்முறை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவின் 1ம் பிரிவிற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :