இன்று உலக ஊடக சுதந்திர தினம் !

3.5.13

உலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனத்தின் பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி வருடாந்தம் மே 3ஆம் திகதி ஊடக சுதந்திர தினமான ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் ஊடகங்கள் கூட்டாக இணைந்து, 1991ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி ‘ஊடக சுதந்திர சாசனத்’ தை முன்வைத்தனர். இந்த நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது. இந்த விருது 1986 டிசம்பர் 17 இல் கொல்லப்பட்ட கொலம்பிய பத்திரிகையாளர் Guillermo Cano Isaza என்பவரின் நினைவாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கருத்துச் சுதந்திரம் மக்களின் மிக அடிப்படையான சுதந்திரங்களில் ஒன்று. சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 19ஆம் சரத்தில் ஊடக சுதந்திரம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் சில நாடுகளில் இதற்கு உரிய மதிப்பு அளிக்கப்படுவதில்லை. இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் இன்றுவரை ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே தமது பணிகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் ஊடகத்துறைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்குள் இருந்தே தமது பணியை செய்ய வேண்டிய இருப்பதாகவும் ஊடகவியலாளர் சார் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. ஊடகவியலாளர்கள் காணாமற்போதல், கொலை, அச்சுறுத்தல், பாதுகாப்பற்ற சூழல் என இலங்கையில் வாழ முடியாது பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த வருடத்தின் முதல் மூன்று மாதகாலப்பகுதியில் மட்டும் வடமாகாண ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது இலக்கு வைத்து பல தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கிலிருந்து இயங்கும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிக்கைகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

0 கருத்துக்கள் :