யாழ்.பல்கலையிலிருந்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் வெளியேற்றம்

18.5.13


தமிழர் தாயகமெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அச்சத்தின் காரணமாக யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கமும் சிங்களப் படைகளும் வன்னியில் முன்னெடுத்த இன அழிப்பு யுத்தத்தின் போது உயிரிழந்த ஒரு லட்சம் வரையான பொதுமக்களுக்கு வன்னிப் பகுதி உட்பட தமிழர் தாயகத்தின் பல இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இன்றைய தினமும் பல்கலைக்கத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழகத்தில் நடத்த விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழகத்தை ஒரு வார காலம் மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் கல்வியதிகாரிகள் ஆலோசித்திருந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனால், பல்கலைக்கழகம் மூடப்படுவதற்கு முன்பாகவே யாழ்.பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்ற தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அச்சத்தின் காரணமாக வெளியேறி தமது இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகச் சுற்றாடலில் கடந்த சில தினங்களாக படையினரும் படைப் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்ற கண்காணிப்பு நடவடிக்கைகளால் பல்கலைக்கழகத்தில் நிலவிய அச்சமான சூழ்நிலையைத் தொடர்ந்தே மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
கடந்த மாவீரர் தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் நின்ற மாணவியொருவர் அச்சத்தின் காரணமாக கொழும்புக்குச் சென்று அங்கிருந்தவாறு தனது முகப்பதிப்பில் (பேஸ்புக்) வெளியிட்ட கருத்தானது அதே விடுதியில் நின்ற தமிழ் மாணவிகளை பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் விசாரணைக்கு அழைக்கக் காரணமாக இருந்தது.
அதாவது, மாவீரர் தினத்தன்று மாணவிகள் மாவீரர்களுக்கு தீபமேற்றினர் என்றும் அவர்கள் அன்றைய தினம் ஒருவகையான வெறித்தனத்துடன் நின்றனர் என்றும் குறிப்பாகச் சொல்லப்போனால் அவர்கள் புலிகள் போலவே நின்றனர் என்றும் குறித்த மாணவி தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தானது தமிழ் மாணவிகளைப் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரிடம் மாட்டிவிடுகின்ற செயற்பாடாக அமைந்தது.
இந்த நிலையிலேயே வன்னியில் கொல்லப்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அச்சத்தின் காரணமாக வெளியேறியுள்ளனர்.
ஈழப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த தொடர்புகளைக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழகம் போராட்டத்தின் நியாயப்பாடுகளைத் தமிழ் மக்களுக்கும் சர்வதேச அரசாங்கங்களுக்கும் எடுத்தியம்பும் களமாகவும் விளங்கியது. இந்த நிலைப்பாட்டிலிருந்து யாழ்.பல்கலைக்கழகம் தற்போதும் மாறாமல் செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :