லயன் எயார் விமானத்தை புலிகள் ஏன் சுட்டுவீழ்த்தினார்கள்? -

11.5.13

தமிழீழ விடுதலைப் புலிகளால் 15 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் ‘லயன் எயார் - அன்டனோவ் 24’ ரக விமானத்தின் நொறுங்கிய பகுதிகளில் சில கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்காக் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் சிறீலங்கா கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றின் உதவியுடனேயே இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த கடற்பிரதேசத்துக்குச் சென்ற சிறீலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர், காவல்துறை அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, காவல்துறை ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன உள்ளிட்ட காவல்துறை மற்றும் முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என 250க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டபதை நேரில் பார்வையிட்டனர்.
விமானத்தின் இயந்திரம் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில தற்போது மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.வை.மஹப்தீன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
1998 செப்டம்பர் மாதம் 29ம் திகதி 48 பயணிகளுடனும் 8 விமான சிப்பந்திகளுடனும் பலாலியில் இருந்து புறப்பட்ட லயன் எயார் 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது. இந்த விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகின்றது.
கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான பொது மக்களுக்கான விமான சேவைகள் பாதுகாப்புக் காரணங்களைக் காண்பித்து, சிறீலங்காவின் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையினால் பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும், சந்திரிகா அரசாங்கம் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததன் பின்னர், பொது மக்களுக்கான விமான சேவைகள் அதிகம் நடைபெறுவதுபோல் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

லயன் எயார், மொனரா உட்பட சுமார் மூன்று வரையான விமான சேவை நிறுவனங்கள் யாழ்குடாவிற்கான பறப்பில் ஈடுபட்டிருந்தன. பொது மக்களுக்கான விமான சேவை என்ற பெயரில் இராணுவத்தினரும், அவர்களுக்குத் தேவையான இராணுவ தளவாடங்களும் பொருட்களும் தனியார் விமான சேவை மூலம் ஏற்றி இறக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருந்த விடுதலைப் புலிகள், அவ்வாறான விமான சேவைகளை நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இயங்கிய லயன் எயார் விமான சேவை நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்கள்.
ஆனால், அந்த விமான சேவை நிறுவனம் இது வர்த்தகப் போட்டி காரணமாக அனுப்பப்பட்டுள்ளது எனக்கூறி அதனைப் புறந்தள்ளிவிட்டு, தொடர்ந்து பறப்பில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என மீண்டும் வலியுறுத்தி விடுதலைப் புலிகளால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து விமானம் கடலில் விழுவதற்கு நான்கு நாட்கள் முன்பாக லயன் எயார் யாழ்.குடாவில் இயங்கிய தனது நிறுவனத்தை மூடியிருந்தது.
விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் காலத்தில் மிகக் கடுமையான போர் கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. தரை வழியிலான பாதைகள் அற்றநிலையில், காயப்படும் இராணுவத்தினரும் அவர்களுக்குத் தேவையான பொருட்களும் விமானப் படையினரால் மாறி மாறி ஏற்றி இறக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அத்துடன், கிளிநொச்சியில் ஆயிரக் கணக்கான படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இதில் 600 வரையான படையினரின் உடலங்களைக் கைப்பற்றியிருந்த விடுதலைப் புலிகள் அவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறீலங்காவிடம் ஒப்படைத்திருந்தனர்.
இவ்வாறு சிறீலங்கா பலத்த இராணுவ நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருந்த நிலையில் பொது மக்களுக்காக யாழ்ப்பாணம் நோக்கி விமானங்கள் பறந்துகொண்டிருந்ததாக கூறப்படுவது முழுப்பொய் என்பதை அனைவரும் அறிவார்கள். அத்துடன், பொது மக்களுக்கான விமான சேவை மேற்கொள்ளப்பட்டால் அது கொழும்பு விமான நிலையத்திற்குத்தான் சென்றுவரவேண்டும். ஆனால், தனியார் விமானங்கள் இரத்மலானை நோக்கியே பறப்புக்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட விழுந்த அன்டனோவ்-24 விமானமும் இராணுவ தேவைகளுக்காக அதிகம் பயன்படும் இரத்மலானை நோக்கியே சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. காயப்பட்ட படையினர் அதிகமாக கொண்டு சென்று இறக்கப்படும் இடமாகவும் இராணுவ தேவைகளுக்கான விமானத் தளமாகவும் பாதுகாப்பு மிக்கதாகக் கருதப்பட்ட இரத்மலானையையே படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
எனவே, இந்த விமானம் இராணுவ தேவைக்காகவே பயன்படுத்தப்பட்டிருந்தது என்பது உறுதியாகின்றது. எனினும், ஒரு சில பொது மக்களும் இதில் ஏற்றப்பட்டிருந்துள்ளனர். அத்துடன் இதில் சிறீலங்கா உயர் இராணுவ அதிகாரிகள் சிலரும் இருந்ததாக அப்போதே தகவல்கள் வெளியாகியிருந்தன. சிறீலங்கா வான் படை விமானங்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக இராணுவ உயரதிகாரிகள் பொது மக்களின் விமானங்களையே தமது போக்குவரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளனர். அத்துடன், சிறீலங்காப் படையினருக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காகச் சென்று வருபவர்களும் இவ்வாறான விமானங்களிலேயே யாழ்குடாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ரஷ்யத் தயாரிப்பான இந்த அன்டனோவ் விமானத்தை உக்ரேன் நாட்டு சிறந்த விமானிகளில் ஒருவரான Matochko Anatoli என்பவரே செலுத்திச் சென்றிருந்தார். அவருடன் உதவி உக்ரேன் விமானி ஒருவரும், உக்ரேன் பொறியிலாளர் ஒருவரும் விமானத்தில் இருந்துள்ளனர்.
இந்த விமானம் வீழ்ந்ததன் பின்னர் கரையதுங்கிய உடலங்கள் சில பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டபோது அவை வெள்ளை இனத்தவர்களின் உடலங்கள் என அவர்கள் கூறியிருந்த தகவல்களும் அப்போதே ஊடகங்களில் வெளியாகியிருந்தன. மிகவும் சேதமடைந்திருந்த அவ் உடலங்கள் ஒப்படைக்க முடியாமல் அப்பகுதிகளிலேயே எரியூட்டப்பட்டன.
இதேவேளை, விமானம் வீழ்த்தப்பட்டிருந்த காலத்தில் சிறீலங்கா இராணுவம் மிகமோசமான அழிவுகளை சந்தித்துக்கொண்டிருந்தது. படையினரை அவசர அவசரமாக ஏற்றி இறக்குவதற்கு வான் வழிப் பாதை மட்டுமே ஒரே தெரிவாக சிறீலங்காவிற்கு இருந்த நிலையில், இராணுவ தேவைக்காகவே இது பறந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் காயப்பட்ட படையினரை ஏற்றி வந்தபோதே கடலில் வீழ்ந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் உடயனடியாகத் தகவல் வெளியிட்டிருந்தன.
ஆனால், இதனை மறுத்த சிறீலங்காவின் எயார் வைஸ் மார்சல் மென்டிஸ், லயன் எயார் சரக்கு விமானங்களில் மட்டுமே காயப்பட்ட படையினரை ஏற்றிச் செல்வதாகவும், பொது மக்களின் விமான சேவைகளில் படையினரை ஏற்றுவதில்லை என்றும் மறுத்திருந்தார்.
எனவே, பயணிகள் விமானத்தை விடுதலைப் புலிகள் சுட்டுவீழ்த்தியதாக குற்றம் சுமத்துவதற்கு சிறீலங்கா பகீரதப்பிரயத்தனங்களை அப்போதே மேற்கொண்டிருந்தது என்பது தெளிவாகின்றது. இந்த விமானம் இரணைதீவிற்கு மேற்காக 3 கிலோ மீற்றர் தொலைவில் விழுந்ததாக நேரில் கண்ட மக்கள் உடனடியாகவே தகவல்கள் வெளியிட்டிருந்தனர்.
தமது கட்டுப்பாட்டுக் கடற் பிரதேசத்தில் விழுந்துள்ள அந்த விமானத்தின் பாகங்களை மீட்பதற்கு சிறீலங்காக் கடற்படையினரை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்திருந்த விடுதலைப் புலிகள், தமது கடற்புலிகள் அதனை மீட்டுத்தருவதற்கு, கடற்படையினர் அப்பகுதியில் தமது படை நடவடிக்கையை நிறுத்தவேண்டும் எனக் கோரியிருந்தார்கள்.
எனினும் சிறீலங்கா படைத் தரப்பு அதனை நிராகரித்த நிலையில் மீட்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்டன. ஆனால், தற்போது முள்ளிவாய்க்காலில் கைது செய்யப்பட்ட ஒரு போராளியின் மூலமே இந்த விமானம் விழுந்த இடத்தையும், இது விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டதென்ற செய்தியையும் அறிந்ததாக சிறீலங்கா தகவல் பரப்ப முனைந்துள்ளது. தங்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் உரிமைகோரி வந்துள்ளனர்.
எனினும், இந்த விமானம் தங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விடுதலைப் புலிகள் உரிமை கோரியிருக்கவில்லை. அத்துடன், இந்த விமானம் சுட்டுத்தான் வீழ்த்தப்பட்டதாக இன்னமும் தொழில்நுட்ப ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த விமானம் வீழ்ந்ததன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில், மேற்படி பயணிகள் விமானத்தை விடுதலைப் புலிகள்தான் சுட்டு வீழ்த்தியதாக சிறீலங்கா குற்றம்சாட்டத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அதனால்தான், எத்தனையோ வான்படை விமானங்கள் விழுந்துள்ள நிலையில், இந்த விமானத்தை மீட்பதற்கு மட்டும் சிறீலங்கா அதிக பிரயத்தனங்களையும் பெரும் செலவையும் செய்துவருகின்றது.  பொது மக்களின் விமானத்தைத்தான் விடுதலைப் புலிகள் சுட்டுவீழ்த்தினார்கள் என்று விடுதலைப் புலிகள் மீது சர்வதேச ரீதியாக அபகீர்த்தியை ஏற்படுத்த இந்த விமானம் வீழ்த்தப்பட்டதை பயன்படுத்த முனைந்துள்ளது. இதற்காகவே நீதிமன்ற ஊடாக கட்டளை பிறப்பிக்கப்பட்டு மீட்புப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :