அழுவதற்கு வேண்டும் அனுமதி

13.5.13

இராமனுக்கு பட்டாபிஷேகம். 14 வருடங்களுக்குப் பின்னர் தலைமகனின் பாதடி பட்ட சந்தோசத்தில் அயோத்தி மகிழ்ந்து கொண்டிருந்தது. இத்தனை வருடங்களாக பாதுகைகளை சுமந்துகொண்டிருந்த அயோத்தியின் அரியணை, இராமனைச் சுமக்கும் தருணத்துக்காக தயாராகிக் கொண்டிருந்தது. எங்கும் விழாக்கோலம். எல்லா நாடுகளிலிருந்தும் அரசர்களும் அவர்களின் பரிவாரங்களும், முனிவர்களும் முனிகுமாரர்களும் திரண்டு வந்திருந்தார்கள். வேதபராயணம் விண்ணைத் தொட இராமனின் தலையில் பொன்னும் மணியும் இழைந்தோடிய மணிமகுடம் சூட்டப்பட்டது. அந்தச் சமயத்தில் திடீரென ஒரு சிரிப்பொலி. எல்லோரும் ஒரு கணம் சிரிப்பொலி வந்த திசைநோக்கி கண்களை திருப்பினார்கள். அடக்கமுடியாத சிரிப்போடு நின்றுகொண்டிருந்தான் இலக்குவன். அவனின் சிரிப்புக்கான காரணம் எவருக்கும் புரியவில்லை. மிகமுக்கியமான ஒரு நிகழ்வு நடந்து முடிந்த தருணத்தில் இலக்குவன் இவ்வாறு சிரித்தது குறித்தே எல்லோரும் தமக்குள் பலவாறு கேள்விகள் எழுப்பிக் கொண்டனர். "14 வருடங்கள் இராவணனிடம் சிறையிருந்த என்னை இராமன் மீண்டும் ஏற்றுக் கொண்டதை கேலி செய்துதான் இலக்குவன் சிரித்திருப்பானோ'' இது சீதையின் நினைப்பு. "பத்தினியான சீதையை சந்தேகப்பட்டு அக்கினிப் பிரவேசம் செய்த எனது செயலை நினைத்துத்தான் தம்பி சிரித்திருக்கிறான் போலும்'' என்பது இராமனின் ஊகம். "என்னதான் பாதுகைகளை வைத்து ஆட்சி செய்தாலும் அண்ணனின் அரியணைக்கு ஆசைப்பட்டவன்தானே நீ என்று என்னை நினைத்துத்தான் இலக்குவன் சிரித்திருக்க வேண்டும்'' என்று கூனிக்குறுகினான் பரதன். இவ்வாறு அங்கிருந்த எல்லோரும் தம்மைக் குறித்தே இலக்குவன் சிரித்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாலும் உண்மைக்காரணம் அதுவல்ல. 14 வருடங்களாக வனவாசம் புகுந்த இராமனைக் கண்ணும் கருத்துமாக காப்பதற்காக இலக்குவன் இந்தக் காலப்பகுதியில் தூக்கத்தை மறந்திருந்தான். எல்லாத் துன்பங்களும் பறந்தோடி பட்டாபிஷேகம் நடைபெற்ற தருணத்தில் தன் கடமைக்கு விடை கொடுத்து மீண்டும் இத்தனை நாளும் அரவணைக்காதிருந்த நித்திராதேவியை அரவணைத்தான். நித்திராதேவியின் அருளால் இத்தனைநாளும் அவன் தேக்கி வைத்திருந்த தூக்கம் ஒரே நொடியில் ஆட்கொள்ள தன்னை மறந்து கனவில் இலக்குவன் சிரித்திருந்தான். இந்தச் சிரிப்பே அங்கிருந்தோரின் கேள்விகளுக்கு காரணமாயிற்று. நீண்டகாலமாக மனதுக்குள் தேக்கிவைத்திருக்கும் உணர்வுகள் அடக்கமுடியாத நிலையை எய்தும் போது அது பெரிதாக வெடித்துக் கிளம்பும். சில வேளைகளில் இந்த உடைப்பு எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்திவிடக் கூடும். முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து நான்கு வருடங்கள் கடக்கப்போகின்றன. ஆயினும் அந்தப் பேரவலத்தில் பட்டவலிகள் இன்னமும் ஆற்றமுடியாதவையாக இருக்கின்றன. கடைசிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் இன்னமும் திரும்பிவரவே இல்லை. "என்ர அப்பா எங்கை அம்மா?'' என்று தினம் தினம் தம் தாய்மாரிடம் தந்தையர் குறித்து பிள்ளைகள் கேட்கும் கேள்விகளும், அவற்றுக்கு தாய்மார் பதிலாகத் தரும் கண்ணீரும் நீண்டுகொண்டே செல்கின்றன. எந்த உறுதிமொழியும், எந்தப் பிரேரணையும் அவர்களது துயருக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் திணறுகின்றன. உறவுகள் இறந்தார்களா?, அல்லது இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்களா? என்பது தெரிந்தால்கூட ஓரளவுக்கு அவர்களது மனக்காயம் ஆறியிருக்கும். ஆனால் எதுவுமே தெரியாமல் எல்லாத் திசைகளிலும் தேடியலைந்து களைத்துப்போய் மீண்டும் அதே தேடுதலில் அவர்களது வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது. வான்பரப்பை நிறைத்து வட்டமிட்ட இரும்பு வல்லூறுகள் இட்டுவிட்டுப்போன எச்சங்களாலும், நிலம் எங்கும் நீக்கமற வீழ்ந்துவெடித்துச் சிதறிய பல்குழல் எறிகணைகளாலும், கணநேர இடைவெளி இன்றி காற்றைக் கிழித்துக்கொண்டு வந்த துப்பாக்கிச் சன்னங்களாலும் உடல் அவயவங்களை இழந்துபோனவர்களின் வாழ்வு தறுக்கணித்தே கிடக்கிறது. அவர்கள் தாவரங்களாக பிறந்திருந்தால் இப்போது புதிய கைகளும் கால்களும் முளைத்திருக்கும். ஊனமென்ற அடைச்சொல்லை சுமந்திருக்க வேண்டிய கட்டாயம் காணாமல் போயிருக்கும். ஆனால் அவர்கள் பாழாய்ப்போன மனிதர்களாக அதிலும் தமிழர்களாகவல்லவா பிறந்துவிட்டார்கள். இனியும் அவர்களின் வாழ்வு ஊன்றுகோல், பொய்க்கால், முச்சக்கரவண்டி இவற்றோடுதான் அசையவேண்டியிருக்கிறது. கூடவே சமூகத்தின் பரிதாபப் பார்வையையும் சகிக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தது முன்னெப்போதும் எம் சமூகம் கண்டிராத உலகமகா வேள்வி. பிரளயத்தின் பிரளயம். ஊழியின் உச்சத்தாண்டவம். இதன்போது வயது, பால் வேறுபாடு எதுவுமின்றி அப்பாவிகள் அனைவரும் ஆயுதங்களால் நசிக்கப்பட்டனர். உயிரோடும் பிணமாகவும் குழிகளில் கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டனர். பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு கூட்டு வன்புணர்வின் கொடூரங்களால் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட நிர்வாண உடல்கள் பின்னொரு பொழுதில் பார்த்து ரசிப்பதற்காக வேட்டை மிருகங்களால் கைபேசிகளில் பதிவுசெய்யப்பட்டன. வெள்ளைக்கொடியோடு கைகளை உயர்த்திக்கொண்டு வந்த நிராயுதபாணிகள் உயிரோடு தீயூட்டப்பட்டார்கள். போக்கிடம் தெரியாமல் சிங்கத்தின் குகைக்குள் வந்துசேர்ந்த அப்பாவிப் பாலகர்களுக்கு பிஸ்கட்டை உண்ணக்கொடுத்து உயிர் பறிக்கப்பட்டது. என்னென்ன கொடூரங்கள் எல்லாம் உலகில் உண்டோ அவை யாவும் முள்ளிவாய்க்கால் என்ற சதுப்புநில கடற்கரைப் பகுதியில் ஒன்றுகூட விடாமல் அரங்கேற்றப்பட்டன. இந்தக் கோரங்களைக் கண்டு அதிர்ச்சியிலும் பயத்திலும் வாய்பேசமுடியாதவர்களாக மாறிப்போனவர்கள் ஏராளம். தங்கள் கண்முன்னால் கொல்லப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட உறவுகளுக்காக கண்ணீர்விடக்கூட அவர்களுக்கு காலமும் போரும், அதிகாரத்தின் ஏவல் நாய்களும் அவகாசம் கொடுக்கவில்லை. அதன் பின்னரும் நலன்புரி நிலையங்களுக்குள் எஞ்சியவர்கள் அடைக்கப்பட்டு அவர்களின் எல்லா உணர்வுகளுக்கும் துப்பாக்கிமுனையில் பெரிய பூட்டொன்று போடப்பட்டது. அப்போதும் அவர்களால் அழமுடிந்திருக்கவில்லை. அவர்களால் முடிந்ததெல்லாம் பூசலாரைப் போல மனத்துக்குள் செய்யக்கூடிய அஞ்சலிப்புக்கள் மட்டுமே. போரில் கொல்லப்பட்ட தம் உறவுகளை நினைந்து ஒரு தீபம் ஏற்றவோ அல்லது ஒரு சொட்டுக் கண்ணீரை உகுக்கவோ இன்னமும் அனுமதியில்லாத தேசத்தில்தான் இன்னமும் வாழ்கிறோம். இதற்கே அனுமதி தராதவர்கள் எப்படி சமஉரிமையோடு வாழச் சம்மதிப்பார்கள்? மூன்று வருடங்களாக அதிகாரத்தின் இரும்பு மனம் இளகவில்லை. இதனால் நெஞ்சில் மூண்டெழுந்த கனலும் கண்களில் திரண்டெழுந்த கண்ணீரும் பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை வெளியே வருவதற்கான எந்த வாசலும் திறப்பதாகத் தெரியவில்லை. இந்தமுறை கூட கண்ணீர் சிந்துவதற்கான அனுமதியை அதிகாரம் கொடுக்குமா? இல்லையா? என்பது விடைதெரியாக் கேள்வியாகவே இருக்கிறது. இறந்துபோன தம் உறவுகளுக்காக அழுதுபுலம்பக்கூட அனுமதி கேட்கும் அவலம் உலகிலேயே இலங்கையில்தான் உண்டு. என்றாலும் அடக்கப்பட்ட அழுகைகள் ஒன்றாய்த் திரண்டு ஒரு நாள் கண்ணீர்ச் சுனாமியாய் உருவெடுத்து, அதிகாரத்தின் அத்தனை தளைகளையும் அடித்துச்செல்லத்தான் போகின்றது. மூலம் :உதயன்

0 கருத்துக்கள் :