தமிழர்களுக்காக குரல் கொடுத்தத சிங்களப்புலி ஜயலத் மறைந்துவிட்டார்

30.5.13

தமிழ் பேசும் மக்களுக்கு, பெரும்பான்மை சகோதர இனத்தின் மத்தியில் புதிய நண்பர்கள் உருவாகாத நிலையில், புதிது புதிதாக இனவாத பகைமை பேசுபவர்கள்தான் நாள்தோறும் தோன்றி வருகின்றார்கள்.
இந்நிலையில் நம் மத்தியில் செயற்பட்டு, வாழ்ந்து, இருந்த தமிழ் பேசும் மக்களின் நண்பர்  மருத்துவ கலாநிதி ஜயலத் ஜயவர்த்தனவின் மறைவு, இன்றைய இனவாத சூழ்நிலையில் மிகப்பெரும் இழப்பாக என்னால் உணர முடிகின்றது.
அவரது மறைவு என் மனதை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் சிகிச்சை  பெற்றிருந்த வேளையில் மரணமடைந்த ஜயலத் ஜயவர்த்தன எம்பியின் மறைவு தொடர்பாக மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
2007ம் வருடத்தில் என்னை சிஐடியினர் விசாரணை என்ற பெயரில் ஒன்பது மணித்தியாலம் தடுத்துவைத்து கைது செய்ய முயற்சித்த வேளையில் என்னோடு இறுதிவரை விசாரணையின் போது கூட இருந்து போலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு என்னை மீட்டு வந்தவர், ஜயலத் ஜயவர்தன ஆகும். ஆகவே நான் தனிப்பட்டமுறையில், ஜயலத் ஜயவர்தனவுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்.
கொழும்பில் தமிழர்கள் நாளாந்தம் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு, கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்ட, கோர யுத்தம் நடைபெற்ற காலமாக அப்போதைய காலகட்டம் இருந்தது. இன்றைய காலகட்டத்தைவிட அன்று நாளாந்த நிலைமைகள் கடும் மோசமாக இருந்தன.
எனது கட்சி உறுப்பினர்கள்கூட என்னுடன் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதற்கு தயங்கிய அந்த காலகட்டத்தில், ஜயலத் ஜயவர்தன என்னுடன் இணைந்து நின்று சிங்கள புலி என்ற பட்டத்தை சுமந்தார்.
அவரது இந்த தமிழ் பேசும் மக்கள் சார்பு கொள்கை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினர் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்த வேளையிலும் ஜயலத் ஜயவர்தன தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளவில்லை. 
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆழ்ந்த இரங்கலை ஜயலத் ஜயவர்தனவின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தெரிவித்துகொள்கின்றேன்.  அவரது இறுதி கிரியைகளில் நமது கட்சி தொண்டர்கள் தீவிரமாக பங்குபற்ற வேண்டும் எனவும் கேட்டு கொள்கின்றேன்.

0 கருத்துக்கள் :