ராஜிவ் கொலை. மறுவிசாரணை குறித்து பதிலளிக்க உத்தரவு!

29.5.13

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது ஜூன் 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ)க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று புதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தங்கள் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார்.
அதில், கொலை வழக்கில் சந்திராசாமி விசாரிக்கப்படவில்லை, ராஜிவ் படுகொலை தொடர்பான சில வீடியோக்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் விசாரணை அதிகாரி ரகோத்தமன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
எனவே மறுவிசாரணை நடத்தி புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என அவர் கோரியிருக்கிறார்.
நீதிபதிகள் செல்வம் மற்றும் தேவதாஸ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் சிபிஐ துணை இயக்குநர், இந்திய உளவுத்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

0 கருத்துக்கள் :