கிரிக்கெட் சூதாட்ட புகார்: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்கள் கைது

16.5.13


கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களும், 7 புக்கிகளும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஐபிஎல் 6 கிரிக்கெட் போட்டி பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் 6 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் மும்முரமாக நடப்பதாகவும், இதில் 40 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும், இந்தத் தொகை இதைவிட அதிகமாக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மேட்ச் பிக்சிங் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் போலீசாருக்கு தகவல் கசிந்தது. யார் யார் மீது சந்தேகம் வந்ததோ அவர்களை போலீசார் உன்னிப்பாக கவனித்து வந்தனர். இத்தொடரில், ராஜஸ்தான் அணி சார்பில் விளையாடும் பிரபல வீரர் ஸ்ரீசாந்த்தை, மும்பையிலுள்ள அவரது நண்பர் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், அதே அணியைச் சேர்ந்த அங்கிட் சவான் மற்றும் அஜித் சர்மா ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்காக டில்லியிலிருந்து சிறப்பு போலீஸ் படை மும்பை வந்துள்ளது. நேற்று மும்பையில், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த ராஜஸ்தான் அணியினர் ஓட்டலுக்கு திரும்பிய சில மணி நேரங்களில் இந்த கைது சம்பவங்கள் நடந்துள்ளன. வீரர்கள் மூன்று பேர் மீதும் இந்திய குற்றவியல் சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி ( சதி செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 7 புக்கிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விசாரணைக்காக டில்லி அழைத்து செல்லப்பட்டனர். இது தொடர்பாக டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கிரிக்கெட் சூதாட்டத்தில் இந்த வீரர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து புகார்கள் வந்ததையடுத்து, போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும், தற்போது விசாரணை நடக்கவிருப்பதால், இது குறித்து மேலும் விவரிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். வீரர்கள் கைது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணி நிர்வாகம், தங்களது வீரர்கள் 3 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்ததாகவும், அது தங்களுக்கு வியப்பை அளித்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக, பி.சி.சி.ஐ.,யுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாகவும், இவ்விவகாரத்தில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :