அதிர்ச்சி தகவல்! தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்

20.5.13

தமிழ்நாட்டில் மட்டும் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் தங்கவேலு கூறினார்.

புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தமிழக தனியார் மருத்துவமனைகள் கூட்டமைப்பின் 97-வது கிழக்கு மண்டல மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க வந்த சங்கத்தின் மாநில தலைவர் தங்கவேலு நிருபர்களிடம் கூறியவதாது:-

தமிழக அரசின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் பட்டியலில் விடுபட்ட தனியார் மருத்துவமனைகளையும் சேர்க்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

தனியார் நர்சிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில் தனியார் நர்சிங் கல்லூரிகள் 2 மட்டுமே உள்ளன. இங்கு படிக்கும் மாணவிகளும் அரசு கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் தான் படிக்கின்றனர். எனவே அரசு தனது முடிவை ரத்து செய்து அவர்களும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் ஆலோசனைப்படி மருத்துவமனை விரிவாக்க சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நுகர்பொருள் பாதுகாப்பு சட்டத்தில் இருந்து மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :