வைராக்கியமாக நடைபயணத்தை தொடர்ந்த வைகோ...!

18.4.13


பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபயணம் மேற்கொண்ட வைகோவுக்கு இன்று திடீரென மயக்கமும்,வயிற்றுப் போக்கும் ஏற்பட்ட நிலையிலும், அவர் தனது நடைபயணத்தை தொடர்ந்தார். பூரண மதுவிலக்கைஅமல்படுத்தக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நேற்று தனது நடைபயணத்தை மீண்டும் தொடங்கினார். இந்நிலையில் கோட்டூர் என்ற ஊர் அருகில் உள்ள மலையன்பட்டிணம் என்ற கிராமத்திலிருந்து இன்று காலை 7 மணி அளவில், வைகோ தனது இரண்டாவது நாள் நடைபயணத்தை மேற்கொண்டார். பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் வைகோவுக்கு ரத்த அழுத்தம் குறைந்து தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.அத்துடன் தொடர்ந்து 3 முறை வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடைந்த வைகோ,வழியில் இருந்த பூவளப்பம் பருத்தி என்ற இடத்தில் இருந்த தென்னந்தோப்பில் அமர்ந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பகல் 12.30 மணி அளவில் டாக்டரும், மதிமுக முன்னாள் எம்.பி.யுமான கிருஷ்ணன் மற்றும் இன்னொரு டாக்டரான வரதராஜன் ஆகிய 2 பேரும் அங்கு விரைந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து வைகோவை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தமது தென்னந்தோப்பில் வைகோ உடல் நலம் குன்றி தங்கியிருப்பதை அறிந்து அங்கு வந்த தோப்பின் உரிமையாளரான சின்ன அம்மணி என்ற பெண்,"மக்களுக்காக பாடுபடுகிற நீங்கள் உங்களது உடல் நலத்தையும் கவனிக்க வேண்டும்" என்று அன்புடனும், உரிமையுடனும் கேட்டுக்கொண்டார். அவரது பேச்சைக்கேட்ட வைகோ," அம்மா...உங்களது பாசமும் அக்கறையான பேச்சும் எனது அம்மா காட்டும் பாசம் போன்றே உள்ளது" எனக் கூறினார்.அப்போது வைகோவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.இதனைக் கண்ட மதிமுகவினரும் கண்ணீர் மல்க நெகிழ்ந்து போயினர். இந்த உணர்ச்சிகரமான தருணத்திற்கிடையே, மருத்துவர்கள் மற்றும் அந்த பெண்மணியின் வேண்டுகோளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் வைகோ தனது நடைபயணத்தை தொடர்ந்துள்ளார்.

0 கருத்துக்கள் :