தம்மைத் தாமே தாக்கிக் கொள்கிறார்கள்!- உதயன் தாக்குதல் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

14.4.13

யாழ். உதயன் தமிழ்ப் பத்திரிகை அலுவலகம் மீதும் அதன் விநியோகஸ்தர்கள் மீதும் கடந்த காலங்களில் நடந்துள்ள தாக்குதல்கள் அரசாங்கத்தின் மீது அவதூறு ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டவை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது குற்றஞ்சாட்டிய அமைச்சர் டக்ளஸ், அரசியல் தஞ்சம் கோருவதற்காகவும் மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காகவுமே இப்படியான தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழோசைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரித கதியில் நடாத்துமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் உதயன் பத்திரிகையின் செயற்பாடுகளும் கடந்த கால வன்முறைகளுக்கு துணைபோவது போல் அமைந்துள்ளதென அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வட மாகாணத்தில் தேர்தல் நடாத்தப்பட இருப்பதால் சிலர் தங்களுக்கு தாங்களே தாக்குதல் நடாத்தி அனுதாபம் தேடிக் கொள்ளும் முயற்சியாகவும், இது இருக்கலாம் எனவும் வரலாற்று அனுபவத்தில் தாம் இதை கண்டிருப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கில் வன்முறைகளற்ற தனிநபர் சுதந்திரத்தை பேணக்கூடிய சமூகமொன்று உருவாக வேண்டும் என்பதே தங்களுடைய விருப்பம் என அவர் கூறியுள்ளார்.

எனினும் பிபிசி தமிழோசை நிருபரின் சில கேள்விகளுக்கு மழுப்பலான, திசை திருப்பும் விதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பதில்கள் அமைந்திருந்தன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

0 கருத்துக்கள் :