போர் இன்னும் முடிந்து விடவில்லை என்பதை மாணவர்களின் போராட்டம் தெளிவாக உணர்த்துகிறது!- காசி ஆனந்தன்

13.4.13

முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல, அது ஒரு திருப்பம். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று வீசும் நெருப்பின் வீச்சு போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதை மாணவர்களின் உணர்ச்சிமிகு போராட்டம் தெளிவாக உணர்த்துகிறது என உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலைத் தீர்மானிக்கும் 1 கோடி வாக்குகள்! மாணவர்கள் விடும் எச்சரிக்கை

போராட்டங்களை முடித்துக் கொண்டு கல்லூரி திரும்பியிருக்கிறார்கள் மாணவர்கள். ஆனாலும் கறுப்பு பட்ஜ் அணிந்து செல்வது, வகுப்பறையில் தினமும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி... எனத் தங்களின் போராட்டங்களை வெவ்வேறு வடிவங்களில் தொடர்கின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனை அழைத்து மாணவர்கள், 'தமிழீழமும் மாணவர் கடமையும்’ எனும் கருத்தரங்கத்தை திருப்பூரில் நடத்தினர்.

கருத்தரங்கில் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், 'மாணவர்களின் போராட்டம் வீண் போகவில்லை. மாணவர்களின் கோரிக்கைகள் எல்லாம் தமிழக அரசால் தீர்மானங்களாக முன்னெடுக்கப்படுகின்றன. 2009-ம் ஆண்டு மத்திய ஆட்சியில் இருந்து வெளியேறியிருக்க வேண்டிய தி.மு.க-வை இப்போதாவது அப்படி முடிவெடுக்க வைத்தது, மாணவர்களின் போராட்டம்தான்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை பொலிஸார் மிரட்டுகிறார்கள். போராடினால் அரசு வேலை கிடைக்காது என்கிறார்கள். பொது நலனுக்காக உண்மையாகப் போராடும் இவர்களுக்கு அரசு வேலை கொடுத்தால்தான், இந்த நாடு லஞ்ச, லாவண்யம் இல்லாமல் இருக்கும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் முதல் வாக்கைச் செலுத்தப் போகிறவர்கள் கல்லூரி மாணவர்கள். தமிழகத்தில் வாக்களிக்கப் போகும் ஆறு கோடிப் பேரில் கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் மாணவர்கள்.

தங்கள் குடும்பத்தினரின் வாக்குகளையும் மாற்றும் சக்தி மாணவர்களுக்கு உண்டு. இந்த வாக்குகள் எல்லாம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் துணை நிற்கும் கட்சிகளையும் அழித்து ஒழிக்கும். அது நிச்சயம்' என்றார்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், ''மாணவர்கள் மிகக் கூர்​மை​யுடன் இந்தப் பிரச்னையைக் கவனித்துவருகின்றனர். மிகத் தெளிவாகப் போராடி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல, அது ஒரு திருப்பம். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று வீசும் நெருப்பின் வீச்சு போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

இந்திய விடுதலைப் போரைவிட, தமிழீழ விடுதலைப் போரின் பாதிப்பு மிக அதிகம். இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறக்கவில்லை. ஆனால், சின்னஞ்சிறு தமிழீழத்தில் மூன்று லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

தமிழீழத்தில் ரசாயனக் குண்டுகள் வீசி மக்களைக் கொன்றனர். பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். இதெல்லாம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் நடக்கவில்லை. அந்த விதத்தில் இது மிகப் பெரியது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, 'இலங்கையில் நடப்பது இனப்படுகொலை’ என்றார்.

இப்போது நிலைமை மோசமடைந்திருக்கும் நிலையில், இனப்படுகொலை எனக் கூறாமல், 'போர்க் குற்றம் நடந்திருக்கிறது’ என்று மட்டுமே சொல்வது எவ்வளவு பெரிய அநீதி?

எத்தனையோ பெரிய கொடுமைகள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. மட்டக்களப்பில் பிறப்புறுப்பில் குண்டுவைத்து கோணேஸ்வரி சிதைக்கப்பட்டாள். புங்குடுதீவு கண்ணகி கோயிலில், சாரதாம்பாள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்​பட்டாள். இசைப்பிரியாவைச் சிறைப்படுத்திய இன வெறியர்கள், போர்க் கைதிகளை நடத்தும் உலக விதிப்படியா நடத்தினர்?

தமிழீழப் பகுதிகளில் கடும் வறுமை நிலவியபோது, இந்தியா போர் விமானம் மூலம் உணவுப் பொட்​டலங்​களை வீசியது. கொஞ்ச காலத்தில் அதே போர் விமானங்கள் எங்கள் தலையில்குண்டு​களை வீசின. அதேபோல முதலில் பிஸ்கட் கொ​டுத்து, பின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்​ பாலச்​சந்திரன்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சில நேரங்களில் எங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை'' என்றார்.

மதுரையிலும் நாகர்கோவிலிலும் மாணவர்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு​​செல்வதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கியுள்ளனர். தேர்வுகள் முடிந்ததும் அதற்கான அறிவிப்பு வரும்.

காமன்வெல்த் உஷார்!

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் கடந்த 7-ம் தேதி திருச்சியில் முதல் பொதுக்கூட்டத்தை ஆரம்பித்தனர்.

கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், ''1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களில் பலர் மீது காங்கிரஸ் அரசு, இந்திய தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது.

அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அடியோடு துடைத்தெறியப்பட்டது. அதே போன்றதொரு நிகழ்வு இப்போதும் நிகழும்'' என்றார்.

நல்லகண்ணு பேசும்போது, ''ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பங்களாதேஷ் என்ற நாட்டையே உருவாக்கிக் கொடுத்தார் இந்திரா காந்தி. இலங்கையிலும் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்க இந்திய அரசு உதவ வேண்டும் என்றார்.

பழ.நெடுமாறன், ''காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி நடந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகள் ராஜபக்சதான் காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவர்.

அந்தப் பதவியை வைத்து அவர் இனப்படுகொலை குற்றச்சாட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கு வரமாட்டேன் என்று கனடா அதிபர் அறிவித்துள்ளார். அந்த தைரியமும் துணிவும் ஏன் இந்தியாவுக்கு இல்லை? என்றார்.

0 கருத்துக்கள் :