எமது நிலம் எமக்கு வேண்டும் யாழில் இன்று உரிமை முழக்கம்.

24.4.13

எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு என்ற உரிமை முழக்கத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் நில சுவிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்னிலங்கை முற்போக்கு கட்சிகளும் கலந்து கொண்டன. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எங்கள் நிலங்களை விட்டு இராணுவம் வெளியேவேண்டும் எமது மண்ணில் நாங்கள் ஆளும் உரிமை எமக்கு வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர். முற்று முழுதாக பொலிஸாரின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அரச புலனாய்வுப் பிரிவினர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களையும் அரசியல் தலைவர்களையும் புகைப்படம் எடுப்பதில் குறியாக இருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தங்கள் எதிர்பபை வெளிப்படுத்தினர். அரசு மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியும் தாங்கிய வாறும் மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 200 மேற்பட்ட பொலிஸாரும் புலனாய்வாய்ளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அக் கட்சியின்பொதுச் செயலாளர் கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், நவசமாயக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் பாக்கிய முத்து சரவனன், மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன், கொழும்பு மாநாகரசபை உறுப்பினர் பாஸ்கரா மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அரச புலனாய்வுப் பரிவினரால் அச்சுறுத்தல் வலி.வடக்கு மக்களின் காணிகளில் பாரிய இராணுவ முகாமை அமைப்பதற்கும், தமிழ் மக்களின் காணிகளை அரசு பறிப்பதை எதிர்த்து யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று புதன்கிழமை கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களை அரச புலனாய்வுப் பரிவினர் அச்சுறுத்தியுள்ளதாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பொதுமக்கள் தடுக்கப்பட்டதாகவும் அவர்களை ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். அத்தோடு நில பறிப்புக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் கலகம் அடக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அத்தோடு அரச புலனாய்வுப் பரிவினர் அதிகளவில் கலந்து கொண்டதுடன் அர்பாட்டக் காரர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது எங்கள் நிலங்களைப் பாதுகாக்க தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளோம்- பா.உ சிறிதரன் தெரிவிப்பு எங்கள் நிலங்களைப் பாதுகாப்பதற்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய நிலங்கள் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. எமது பெண்கள், கலாச்சாரங்கள் திட்டமிட்டப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. எமது மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் காடுகளில் கொண்டு சென்று அடைக்கப்பட்டுள்ளனர். எமது வாழ்விடங்கள் சிங்கள அரசாங்கத்தால் அபகரிக்கப்படுகின்றன. இவற்றை காப்பாற்றுவதற்கு தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். போராட்டங்கள் மூலமே எமது நிலங்களை மீட்பதற்கு எம்மால் முடியும் என்றார். தமிழர் தாயக பூமியில் நடைபெறும் திட்டமிட்ட நிலப் பறிப்பை சர்வதேசம் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும் - செல்வாராச கஜேந்திரன் தமிழ் மக்களின் தாயக பூமியில் நடைபெறும் திட்டமிட்ட நிலப் பறிப்பை சர்வதேசம் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் கோரியுள்ளனர். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களின் வாழ்வியல் நிலங்களைப் பறித்து எமது மக்களை உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. அவர்களின் காணிகளில் இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வீடுகளை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 6500 வரையான ஏக்கர் நிலப்பரப்பு வலி.வடக்கில் இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். இந்தக் காணிகளில் பாரிய படை முகாம்களை அமைத்து இராணுவத்தினரை நிரந்தரமாக தமிழர் பிரதேசங்களில் தங்கியிருக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தமிழ் தேசத்தின் செத்துக்களாக இருக்கும் தமிழர்களது காணிகளை பறித்து அவர்களை நாடற்றவர்களாக்குவதையும் எதிர்காலத்தில் எமது தேசத்தை முழமையான சிங்கள தேசமாக மாற்றுவதற்கு அரசு முயன்று வருகின்றது. தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையின் கீழ் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவி புத்த சிலைகளையும் பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்பி தமிழர் தாயக தேசம் ஒன்று இருந்ததற்கான எந்த வித ஆதாரமும் இல்லாமல் செய்வதற்கு அரச இயந்திரம் செயற்பட்டு வருகின்றது. முள்ளிவாக்காலில் முற்றுப் பெற்ற இனப் போர் இன்று காணிப் போராக மாறியுள்ளது எங்களை எங்கள் நிலத்தில் சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு சர்வதேசம் எங்களுக்கான நிடைக்கால நிர்வாக அலகு ஒன்றை உருவாக்க வேண்டும் என்றார். தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு அந்த இனத்தை மீண்டும் ஒரு ஆயதக் காலாச்சரத்திற்கு கொண்டு செல்லும் - பாஸ்கரா திட்டமிட்ட தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு அந்த இனத்தை மீண்டும் ஒரு ஆயதக் காலாச்சரத்திற்கு கொண்டு செல்லும் என மேலக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்றுபட்டு தமிழரின் உரிமைக்கான போராட்டத்தை செய்வதன் ஊடகாக எங்களது உரிமைகளை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். எமது போராட்டத்தை எங்களது தளத்தில் நின்று போராட வேண்டும். புலம் பெயர்ந்த நாடுகளிலே அல்லது இந்தியாவிலே போராடுவதால் நாங்கள் எங்கள் உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியாது. எங்கு நாம் வாழ்கின்றோம் அந்த தளத்தில் எமது போராட்டம் அமைய வேண்டும். இந்த போராட்டம் அரசுக்கு ஒரு செய்தியைச் செல்லப் போகின்றது. உண்மையில் எங்கள் நிலத்தில் நாங்கள் வாழ்வதற்குரிய உரிமைகள் எமக்கு வேண்டும் அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். எந்தப் போராட்த்தையும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு செய்வதன் மூலம் எங்கள் போராட்ங்கள் வெற்றி பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துக்கள் :