ஈழத்தமிழர் விடுதலைக்காகச் சிந்தும் கண்ணீரும் இரத்தமும் வீண் போகாது-வைகோ!

30.4.13

கண்ணீரும் வியர்வையும் செந்நீரும் சிந்திப் போராடும் வர்க்கம் விடுதலையை வென்றெடுக்கும் என்பதற்கு அடையாளமாகத் திகழும் இந்த மே நாளில் ஈழத் தமிழர் விடுதலைக்காகச் சிந்தும் கண்ணீரும் இரத்தமும் வீண் போகாது மேநாள் வாழ்த்து செய்தியில் வைகோ தெரிவித்துள்ளார்.

வருடத்தின் 365 நாள்களில் ஒரு சில நாள்களே உலகம் முழுமையும் கொண்டாடப்படுகின்ற உன்னதமான நாள்கள் ஆகும். அத்தகைய திருநாள்தான் 'மே' திங்களின் தலைநாள் ஆன ஒன்றாம் தேதி ஆகும்.

'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர'
என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும்இ ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்கஇ பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறிஇ உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும்.
சிகாகோ நகரில் வைக்கோல் சந்தைச் சதுக்கத்தில் திரண்ட தொழிலாளர்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறைக் கொடுமைகளைப் புறங்கண்டு - உரங்கொண்டு போராடிய வீர வரலாற்றை நினைவுகூர்ந்திடும் நாள் இந்நாள்.
காலம் காலமாகப் பாரம்பரியமாக வசந்தகால விழாக்கள் கொண்டாடப்படும் நாளாக இருந்த மே முதல் நாள் 1899-ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு சோசலிச மன்றத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்றுவரை பசுமையான கிளைகள் செடிகள் மாலைகள் இவற்றுடன் மே தின அரசன் மே தின அரசி மே தினக் கம்பம் என அலங்கரித்துக் கொண்டாடும் பண்டிகை நாளாக இருந்த இந்நாள் தொழிலாளர் ஒற்றுமையைக் குறிக்கும் செம்பதாகைகளின் கீழ் 'உலகத் தமிழர்களே ஒன்றுபடுங்கள்! நம் உரிமைகளை வென்றெடுப்போம்!' என்று உரக்க முழக்கமிடும் நாளாக இந்நாள் திகழ்கிறது.
கண்ணீரும் வியர்வையும் செந்நீரும் சிந்திப் போராடும் வர்க்கம் விடுதலையை வென்றெடுக்கும் என்பதற்கு அடையாளமாகத் திகழும் இந்த மே நாளில் ஈழத் தமிழர் விடுதலைக்காகச் சிந்தும் கண்ணீரும் இரத்தமும் வீண் போகாது என்றும் அவ்வுரிமைப் போராட்டத்தில் உலகத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க்கமும் தங்கள் பங்களிப்பைத் தந்திட வேண்டும் என்று வேண்டிச் சூளுரைத்து மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
''தாயகம்' வைகோ
சென்னை - 8 பொதுச்செயலாளர்
30.04.2013 மறுமலர்ச்சி தி.மு.க.

0 கருத்துக்கள் :