ஈழத்தமிழரை கண்டுகொள்ளாத தேசிய கட்சிகளை புறக்கணிப்போம்

6.4.13

இலங்கைத் தமிழர் விவகாரத்தை கண்டுகொள்ளாத தேசிய கட்சிகளை புறக்கணிப்போம் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது, இலங்கை போர்க்குற்றங்களை இந்திய நாடாளுமன்றத்தில் இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷீத் அறிவித்துள்ளார். இதை காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளலாம். அதேநேரம் மற்ற தேசிய கட்சிகளான கம்யூனிஸ்ட், பாஜக கட்சிகளும், தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சனை இதுவரை தமிழகத்தின் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. தேசிய பிரச்சனையாக இதனைக் கொண்டுசெல்லும் கடமை தேசியக் கட்சிகளுக்கு உள்ளது. எனவே தேசியக் கட்சிகள் இதை ஏற்க மறுத்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகளை தனிமைப்படுத்த வேண்டும். தேர்தலுக்குப் பின்னர் புதுடெல்லியில் அமையும் ஆட்சி தமிழகம் சொல்வதைத் தட்டாமல் செய்ய வேண்டும். அதற்கு, 40 எம்.பி.க்களும் தமிழகத்துக்கு ஆதரவாக இருக்கும் வகையில், தமிழ் உணர்வை எதிர்ப்பவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :