இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல இந்திய மீனவர்களைக் கூட காப்பாற்ற முடியவில்லை

8.4.13

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்தும் பா.ஜ.க. மீனவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவொற்றியூரில்  நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றியபோது பா.ஜ.க. தேசியச் செயலாளர் டாக்டர். தமிழிசை சவுந்திரராஜன் பேசியதாவது,

வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக விளங்கியது. அப்போது பலாலி விமானத் தளத்தைத் புதுப்பித்துத் தருமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்தும், தமிழர்களின் பாதுகாப்பு கருதி அதனை செய்ய வாஜ்பாய் மறுத்தார். ஆனால் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதே விமானத் தளத்தைப் புதுப்பித்து தந்தது மட்டுமல்லாமல்,  இலங்கை ராணுவத்தின் அனைத்து அட்டூழியங்களுக்கும் துணையாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
இலங்கையில் வீடு கட்டித் தர இந்தியா உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.  ஆனால் இந்த வீடுகளில் தமிழர்கள் யாரும் குடியமர்த்தப்படவில்லை. சிங்களர்கள், இலங்கை ராணுவத்தினர்தான் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவையில் தி.மு.க.வினர் கோரிய தீர்மானத்திற்கு ஆதரவு தரவில்லை என்பதற்காக பா.ஜ.க. இந்த விசயத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என புகார் கூறப்பட்டது. ஆனால் எங்கள் கட்சியின் முன்னணித் தலைவர் யஸ்வந்த சின்கா சென்னைக்கே வந்து இலங்கையில் தமிழீழம் அமைய பாடுபடுவோம் என உறுதிபடத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை விசயத்தைப் பொறுத்தவரை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.வின் நிலை வேறு. இனப்படுகொலைக்குப் பிறகு பா.ஜ.க.வின் தற்போதைய நிலை வேறு.  தற்போதைய காங்கிரஸ் அரசால் இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல இந்திய மீனவர்களைக் கூட காப்பாற்ற முடியவில்லை. 1.40 லட்சம் பேரை கொன்ற கொடூரத்தைக் கண்டிக்க காங்கிரஸ் அரசால் முடியவில்லை.

நான் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இப்பதவியின் மூலம் இலங்கைத் தமிழர்கள் நலனிற்காக பா.ஜ.க.வின் தேசியத் தலைமையை வலியுறுத்துவேன்.  வீதிகளில் போராட்டம் நடத்தும் கட்சிகளால் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் கிடைக்காது. ஆனால் இந்திய பாராளுமன்றத்தில் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாகத் திகழும் பா.ஜ.க.வினால்தான் மட்டுமே இதற்கு விடிவு காலம் பிறக்கும். இதற்கான முயற்சியில் தமிழக பா.ஜ.க. செயல்படும். அதனை தேசியத் தலைமை ஏற்கும் என்றார்.

0 கருத்துக்கள் :