உதயன் பிரதான அலுவலகத்தில் விசமிகள் அட்டகாசம்;அச்சு இயந்திரங்களும் எரிப்பு

13.4.13

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன்நாளிதழ் மீது இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிகளுடன் உள்நுழைந்த இனந்தெரியாதவர்கள் சரமாரியாகச் சுட்டபடி அச்சகத்தினுள் புகுந்து அச்சு இயந்திரத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் பெற்றோல் ஊற்றி இயந்திரத்தையும் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். அச்சு இயந்திரம் இயங்க முடியாத அளவுக்கு பழுதடைந்திருப்பதுடன் அச்சு இயந்திரப் பெருமளவான அச்சுத் தாள்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. உதயன் நாளிதழினை முடக்கும் நோக்குடன் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலினால் பத்திரிகை அச்சிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 13ஆம் திகதி அதிகாலை 4.30 மணி அளவில் உதயன் அலுவலக வாசலுக்கு தலைக் கவசம் அணிந்தபடி வந்த மூவரில் ஓருவர் "தூஷண'' வார்த்தைகளால் பாதுகாப்பு ஊழியர்களை ஏசியபடி, அங்கிருந்து ஓடுமாறு விரட்டியபடி வான்நோக்கி வேட்டுக்களைத் தீர்த்திருக்கின்றார். அவனோடு வந்த மற்றைய இருவரும் பிரதான அச்சு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்று பணியாளர்களை வெளியேறுமாறு கூறி வேட்டுக்களைத் தீர்த்தனர். அச்சகப் பணியாளர்கள் மீதான துப்பாக்கிப் பிரயோகத்துக்கு 9மில்லி மீற்றர் பிஸ்ரல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் உயிர் தப்பிக் கொண்ட பணியாளர்கள் அச்சுக் கூடத்தை விட்டுஓடித் தப்பி விட்டனர். துப்பாக்கிதாரிகள் அச்சு இயந்திரத்தின் மீதும் பிரதான மின்மார்க்கத்தின் மீதும் துப்பாக்கியால் சுட்ட பின்னர் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காகித றோல்களைத் தீயிட்டு கொழுத்தி அச்சு இயந்திரத்தின் பிரதான பகுதிகள் மீதும்பெற்றோல் ஊற்றிக்கொழுத்தியுள்ளனர். தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் உதயனின் குரல்வளையை நசுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளின் பட்டியல் நீண்டு கொண்டேசெல்கிறது. உதயன், மக்களின் கரங்களில் செல்வதைத் தடுக்கும் வகையில் விநியோகப் பணியை முடக்கும்செயற்பாடுகள் இந்த வருடத்தின் ஆரம்பம் முதலேமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 10 ஆம் நாள் உதயன் நாளிதழ் விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயம் வடமராட்சிப் பகுதியில் வைத்து விநியோகப் பணியாளர் ஒருவர் தாக்கப்பட்டதோடு அவரது மோட்டார் சைக்கிளும், அவர் கொண்டு சென்ற பத்திரிகைகளும் நடு வீதியில் வைத்து தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. அத்துடன் ஜனவரி 15ஆம் நாள் உதயன் ஊடகவியலாளர் யாழ்.பஸ் நிலையத்தில் வைத்து மிக மோசமாகத் தாக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக யாழ். பஸ் நிலையத்தில் வைத்து உதயன் ஊடகவியலாளர் ஒருவருக்கு சீருடை தரித்த இராணுவ அதிகாரி ஒருவரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி உதயன் கிளிநொச்சி பிராந்திய காரியாலயத்துக்குள் புகுந்துகொண்டகாடையர் குழு அங்கிருந்த பணியாளர்களைப் படுமோசமாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் பல லட்சம் பெறுமதியான பொருள்கள் சேதமாக்கப்பட்டிருந்தன. இது தவிர கடந்த காலங்களிலும் உதயன் பல சவால்களை எதிர்கொண்டிருந்தான். 2006ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் உலக ஊடக நாள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வேளை மே முதலாம் நாள் இரவில் உதயன் வளாகத்தினுள் புகுந்த காடையர்கள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். காடையர்களின் இந்தத் தாக்குதலினால் உதயன் விநியோக முகாமையாளர் மற்றும் உதயன் பணியாளர் ஒருவருமாக இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தின்போது கொல்லப்பட்டனர். அத்துடன் உதயன் ஆசிரியர் பீடத்தினுள் புகுந்த துப்பாக்கிதாரிகள் அலுவலகக் கணினி மற்றும் அதனுடன் இணைந்த உபகரணங்களையும் அழித்தனர். கடந்த 2010ஆம் ஆண்டு பெப்பிரவரிமாதம் உதயன் அலுவலகத்தின் மீது கிரனைட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் உதயன் பிரதம ஆசிரியரின் வாசஸ்தலம் மயிரிழையில் தப்பியது. கடந்த ஏப்ரல் 3ஆம்திகதி கிளிநொச்சியில் உதயன் அலுவலகம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபரிடம் மேலதிக பாதுகாப்புக் கோரி விண்ணப்பித்த போதும் இதுவரையில் அதற்குரிய எந்த விதநடவடிக்கைகளையும் பொலிஸ்மா அதிபர் மேற்கொள்ளவில்லை. இதேவேளை இன்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கமான 119க்குத் தொடர்புகொண்டபோதும் மேலும் யாழ்.பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துக்கு உதயன் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்ட போதும் பொலிஸார் பதிலளிக்கவில்லை. இதன் பின்னர் எமதுகொழும்பு அலுவலகத்தின் ஊடாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி சமன்சிகேராவின் கைத்தொலைபேசிக்கு அறிவித்ததன் பின்னரே பொலிஸார் உதயன் பணிமனைக்கு வருகை தந்து விசாரணைகளைமேற்கொண்டனர்.

0 கருத்துக்கள் :