காபெட் வீதியில் கற்பூரம் எரித்தால் பத்தாயிரம் ரூபா தண்டம்

12.4.13

திரிஸ்டி கழிப்பதற்காக காபெட் வீதியில் கற்பூரம் எரித்தால் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படுமென்று யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். யாழ். மாநகர சபை மாநட்டு மண்டபத்தில் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நேற்று புதன்கிழமை மதியம் 3.00 மணிக்கு வர்த்தக சங்கத்தினருக்கிடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளிக் கிழமைகளில் வர்த்தக நிலையங்களில் திரிஸ்டி கழிப்பதற்காக கற்பூரம் எரிக்கும் போது அது காபெட் வீதியில் வைத்து எரிக்கப்படுகின்றது. இதனால், காபெட் வீதியில் துவாரம் ஏற்பட்டு, அதனூடாக தண்ணீர் சென்று காபெட் சிதைவடைந்து வீதி பழுதடைகிறது. யாழ். நகரில் 1 கிலோ மீற்றர் வீதிக்கு காபெட் இடுவதற்கு 10 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுகின்றதாகவும் அவர் கூறினார். அத்துடன், அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதென்றும் அவற்றினை தவிர்க்கும் முகமாக காபெட் வீதியில், கற்பூரம் எரிப்பதை தவிர்க்குமாறு வர்த்தகர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவித்தலை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படுமென்றும் யாழ். மாநகர முதல்வர் மேலும் கூறினார்.

0 கருத்துக்கள் :