மனிதகுல சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் சமய அடிப்படை வாதங்கள்

30.3.13

சமயங்களின் அடிப்படை நோக்கங்கள் கோட்பாடுகள் இன்று உலகளாவிய ரீதியில் சிதைக்கப்பட்டு வருகின்றன என்பதை விட சிதைந்துவிட்டன என்பது தான் யதார்த்த நிலையாகவுள்ளமையை நோக்க முடிகின்றது. நமது நாடும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை அவதானிக்கும்போது வேதனையே மிஞ்சுகின்றது. சமயங்கள் ஏன் தோற்றம் பெற்றன என்பது புரிந்து கொள்ளப்படாத நிலையில் உலகம் இன்று தடுமாறுகின்றது. தறிகெட்டுச் செல்கின்றது என்பதே உண்மைநிலை. மனிதகுலம் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிப்படுத்துபவையே சமயங்கள். சமயங்கள் வகுத்துக் காட்டியுள்ள வழிகளைக் கைக்கொள்ளாமல் சமயங்களின் பெயரில் மக்கள் மத்தியிலே பிளவுகளும் கொலைகளும் குரோதங்களும் குடிகொண்டுள்ள கேவல நிலையைப் புத்தியுடன் உலகம் புரிந்து கொள்ளவில்லையென்றே தோன்றுகின்றது. சமயங்களை மதங்கள் தர்மங்கள், மார்க்கங்கள் நெறிகள் என்று பலவாறு குறிப்பிடுகின்றோம். இறைவன் பெயரால் மனிதகுலம் வாழும் வழியை ஒழுங்கமைத்து செம்மைப்படுத்தி தனி மனிதனது தனித்துவத்தையும் பேணுவதுடன் மட்டுமன்றி மனிதகுலத்தின் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்தும் வழிமுறைகளே சகல சமய தத்துவங்கள் என்று உரக்கக்கூறப்பட்டாலும் இன்று சமயங்களின் பெயரால் பல நாடுகளில் கொலைக்களங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையும் காணமுடிகின்றது. சமயத்தின் பெயரால் தினமும் மனிதக் கொலைகள் மலிந்து காணப்படுகின்றன. இதுவா சமயங்கள் காட்டிய வழிகள்? சிந்திக்க வேண்டும். உண்மையைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சமயங்கள், அவற்றின் தத்துவங்கள் உலகுக்குப் பொதுவானவை. அவற்றைத் தரம் பிரித்து ஏற்றத்தாழ்வு பார்க்கும் பக்குவம் சாதாரண மனிதருக்கில்லை. அதேபோல் சமயத் தலைவர்களும் சகலருக்கும் பொதுவானவர்கள். மக்களை ஒழுக்கசீலர்களாக பண்பாளர்களாக நற்குணங்கள் கொண்டவர்களாக ஒற்றுமையாக வாழ வழிகாட்டிகளாக அதற்கான போதனைகள் செய்பவர்களாக இருப்போரே கௌரவம் மிக்க சமயத் தலைவர்கள். "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்' என்பது தமிழ் மறை. வெளிவேடங்களால் பயனில்லை. உலகம் வெறுத்தொதுக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டு முடிவளர்த்துக் கொண்டும் தாடி வளர்த்துக் கொண்டும் அல்லது மொட்டையடித்துக்கொண்டும் இருப்பவர்கள் உயர்ந்த நிலையில் போற்றப்படும் பெரியவர்களாக சமயத் தலைவர்களாக ஆகமாட்டார்கள் என்பது தமிழ் வாக்கு. தெய்வக்குறளின் கூற்று, தீர்ப்பு. நமது நாட்டில் சமய சண்டைகளுக்கான அடித்தளம் காணப்படுகின்றது. எந்தச் சமயம் உயர்ந்தது என்று வாதப் பிரதிவாதம் நடத்தப்படுகின்றது. ஒரு நூறு வருடம் வாழத்தகுதியற்ற மனிதன் பல நூற்றாண்டுகள் பழைமையான சமயங்களின் பெயர்களைத் தூக்கிப்பிடித்துப் போராடுகின்றான். சமயத்தைக் காக்கப் போராடுகின்றான். தமிழர்களின் தாய் மொழியான தமிழ் மொழி உலகுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. உலகிலுள்ள சகல சமயத் தத்துவங்களையும் ஏற்று உள்வாங்கி அவற்றை இலக்கியமாக வெளிப்படுத்தியுள்ள ஒரே உலக மொழி தமிழ் மட்டுமே அந்தப் பெருமை தமிழரையும் சாரும். மதகுருமாருக்கு மரியாதை செய்யும் பண்பு இன்று அருகிவிட்டது. அதற்கு மதகுருமாரென்று சீருடை அணிந்தவர்களும் பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர் என்பது யதார்த்தமானது. சித்தார்த்தன் என்ற இந்து இளவரசன் ஆட்சியைத் துறந்து இல்வாழ்வை, சுகபோகவாழ்வைத் துறந்து துறவறம் பூண்டது அந்தக்காலம். இன்று அப்புனிதரின் பெயரால் ஆட்சி அதிகாரமும் சுகபோகவாழ்வும் தேடும் நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது. புத்த பகவானின் போதனைகளைச் சரிவரக் கடைப்பிடிப்போர் அருகிவிட்டனர். அவரின் திருவுருவுக்கு மலர் தூவி வழிபட்டால் போதும் என்ற நிலையேற்பட்டுள்ளது. பஞ்சசீலம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நமது நாட்டில் புனித மதகுருமார் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட அவஸ்தையும் அண்மையில் காணக்கிடைத்தது. பொது மக்களைக் கொன்ற பழக்கம் இன்று சமயக்குருமார் வரை சென்றுவிட்டது. அன்றைய பிரதமர் எஸ். டபிள்யூ ஆர்.டீ.பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொலை செய்ததன் மூலம் இந்நாட்டில் அரசியல் படுகொலைகளைத் தொடக்கி வைத்தவர்கள் சோமராம மற்றும் புத்தரகித்த ஆகிய புத்தமத தேரர்கள் என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பதை மாற்றமுடியாது. சமயக்குருமாரைஅரசியல் மயப்படுத்தும் பயங்கரத்தை இந்த நாடு கண்டுள்ளபோதும் அதை மறந்து விட்டது. புத்தமத குருமாரை அவமதிப்பது புனிதமகான் புத்தர் அதாவது தூய இந்து இளவரசர் சித்தார்த்தனை அவமதிப்பதாகும் என்பதால் ஒவ்வொரு இந்துவும் இது தொடர்பில் வேதனை அடைகின்றான். புத்தரின் புனிதத்தைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு. இன்று புத்தரின் பெயரால் இந்து மதம் பாதிப்புக்குள்ளாவது வேடிக்கையாயுள்ளது. இந்த நாட்டில் புத்த சமயத்தவராலேயே புத்தகுருமார் தாக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதும் கொலைசெய்யப்படுவதும் நிகழும் போது புத்தமதம் இந்த நாட்டில்காக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.பஞ்சசீலம் எனப்படும் புத்த சமயத்தலைவரால் தினமும் கூறப்படும் உறுதி மொழிகளான உயிர்கொலை செய்யமாட்டேன் பிறரின் உடைமைகளைக் களவாடமாட்டேன், தவறானகாம இச்சைக்கு ஆளாகமாட்டேன், சூதாடமாட்டேன். போதைதரும் பொருட்களை பயன்படுத்தமாட்டேன் என்பவை எந்த அளவில் பௌத்த தர்மத்தைப் பேணும் உறுதிகொண்ட நமது இலங்கை நாட்டில் காப்பாற்றப்படுகின்றன. நடைமுறையில் கைக்கொள்ளப்படுகின்றன என்பதை நோக்கும்போது மிஞ்சுவது ஏமாற்றமே. பல ஆண்டுகளுக்கு முன் ஓடும் புகையிரதத்தில்பௌத்த பெண் துறவியொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமையும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அத்தீச் செயலைச் செய்தவன் இந்துவும் அல்ல இஸ்லாமியனும் அல்ல கிறிஸ்தவனும் அல்ல என்பதும் தெளிவான உண்மையாகும். இறைவன் ஒருவனே என்று கூறிக்கொண்டு அந்த இறைவன் படைத்த மனிதர்களை வேறுபடுத்தி ஒதுக்கும் படுபாதகமும் சமயத்தின் பெயரால் மார்க்கத்தின் பெயரால் நிகழ்கின்றன. மதமாற்றம் என்ற செயற்பாடு ஒரே இறைவன் என்ற கோட்பாட்டைக் குழிதோண்டி ஆழப்புதைத்து விடுகின்றது. அரசியல் கட்சிகள் தமக்கு ஆட்சேர்ப்பதைப் போல மதங்களும் ஆட்சேர்க்கும் அருவருப்பான செயற்பாடு நிகழ்ந்து வருகின்றது. நமது நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள சமூக விரிசில்களுக்கு இதுவும் ஒரு ஏதுவாயுள்ளமையை மறுக்க முடியாது. மனித குலத்தின் சகோதரத்துவ உணர்வை இணக்கத்தை அழித்து குரோதத்துக்கும் கொடும் பகைக்கும் வழிசெய்யும் இந்த மதமாற்றம் இந்நாட்டின் நலனுக்கு ஏற்புடையது மட்டுமல்ல பாதகமானதும்கூட. மதமாற்றம் என்ற மூடச்செயல் கண்டிக்கப்பட வேண்டும். | கட்டுப்படுத்தப்படவேண்டும். இதில் புத்தியுள்ளவர்கள் மாற்றுக் கருத்து தெரிவிக்கமாட்டார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் சிலுவையா,வாளா என்று கேட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இன்று உலகில் அந்த நிலை இல்லை என்பது வரவேற்புக்குரியது. இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் சமயம் என்பது மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு உலைவைக்கும் ஒன்றாகிவிட்டது. ஒரே சமயத்துக்குள்ளேயே குத்து வெட்டு கொலைகள் என்று விரோதங்கள் காணப்படுகின்றன. தினமும் கேட்கும் பார்க்கும் செய்திகள் திகிலூட்டுகின்றன. சமயத்தின் பெயரால் அதுவும் ஒரே சமயதின் உட்பூசலால் பிரிவுகளால் பல மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்டு வருகின்றன. ஈராக், பாகிஸ்தான், துருக்கி, சிரியா, லெபனான், லிபியா எகிப்து என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தம்மையும் இழிவுபடுத்தி தாம் பின்பற்றுவதாகக் கூறும் சமயத்தையும் மார்க்கத்தையும் இழிவு படுத்துகின்றார்கள் என்பதைப் புரியாமலுள்ளனர். விளங்கிக் கொள்ளும் புத்தியற்றவர்களாயுள்ளனர் என்பதே உண்மையாகும். மேற்குறிப்பிட்ட நாடுகளில் தினமும் எங்கோ ஒரு மூலையில் கொலைக்களம் ஒன்று திறக்கப் படுகின்றது. மார்க்கத்தின் பெயரால் பலவழிபாட்டிடங்கள் பள்ளிவாசல்கள், மசூதிகள் தாக்கப்படுகின்றன, தகர்க்கப்படுகின்றன இஸ்லாமிய நாடுகளல் தினமும் நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகள் பௌத்தர்களாலோ, இந்துக்களாலோ நடத்தப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியரே அந்நாடுகளில் இந்த அடாவடித்தனம் செய்கின்றனர். சுயநலத்திற்காக சுயதேவைகளுக்காக சமயத்தை, மார்க்கத்தை தலையில் சுமந்து கொண்டு அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்கள் சமயவாதிகளுமல்ல, ஆன்மீகவாதிகளுமல்ல. ஒழுக்கமற்ற சமய வாழ்வு உருப்படாது. ஒழுக்கமற்றவன் குரோத சிந்தனை கொண்டவன், பண்பற்றவன், மனிதத் தன்மையற்றவன் எவனும் ஆன்மீகவாதியுமல்ல. சமயத் தலைவனும் அல்ல என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். மதம் மக்களுக்கு அபின் என்ற கூற்று இன்றைய நிலையை நோக்கும் போது உண்மையானது என்றே தோன்றுகின்றது. மதவெறியை ஏற்படுத்தி மக்கள் மத்தியிலே பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் மதங்கள் தேவைதானா என்று சிந்திப்பதிலும் தவறில்லை. அமெரிக்கா சென்று சொற்பொழிவுகள் ஆற்றி வந்த சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஒருவர் சுவாமிகளிடம் தான் இந் சமயத்தில் இணைய வழிகாட்டுமாறு கேட்டுள்ளார். அதைச் செவிமடுத்த சுவாமிகள் சகோதரி நீங்கள் பின்பற்றிவரும் கிறிஸ்தவ மதத்தில் உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்டு அது காட்டும் வழியில் வாழ்ந்து வருவீர்களானால் நீங்கள் ஒரு இந்து ஆவீர்கள் என்றார் என்பது ஒரு பதிவாகும். எவரொருவர் தான் பிறந்த சமயத்தில் பூரண நம்பிக்கை வைத்து அதுகாட்டும் நல்வழியில் வாழ்கின்றானோ அவனே உண்மையான சமயவாதி. ஆன்மீகவாதி என்பது இன்மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சமயங்களிடையே குரோதத்தை வளர்த்து மக்களைப் பிளவு படுத்துவது சமய வழிமுறையும் அல்ல, சமுதாய நலனுக்கு உகந்ததுமல்ல. இலங்கை ஒரு பல்லின, பல மொழிகள் கொண்ட பல சமயங்களைப் பின்பற்றும் நாடு. இதை முதலில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மொழியை, மதத்தைப் பண்பாடுகளை மற்றவர்கள் புரிந்து மதித்து நடத்தல் வேண்டும். கௌரவிக்கப் பழக வேண்டும். அதேபோல் தமது நோக்கை, கொள்கையை, தத்துவங்களை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது. திணிக்க முற்படவும் கூடாது. தழிழ் மொழியைப் புறக்கணித்து இன்று நாடு படும் அவலம் ஒரு கற்றறிந்த பாடமாக அமைய வேண்டும். வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தி சமூக நலனுக்குப் பலவற்றைச் செய்யலாம். அதைவிடுத்து மதமாற்றம் போன்ற சமூகப் பிளவுகளுக்கு உட்படுத்தக் கூடிய செயல்கள் நிகழ்வது நாட்டிற்கும், சமூகங்களின் உறவுக்கும் நல்லதல்ல. ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது அச்சமில்லாத நிம்மதியான வாழ்வு, அந்த நிம்மதியான வாழ்வுக்கு புனிதமான சமயங்களின் பெயரால் பாதிப்பு வராது பார்த்துக் கொள்ள வேண்டியது சமூக நலப் பொறுப்பாளர்களது கடமை. ஒரு சில சலுகைகளுக்காக வசதிவாய்ப்புகளுக்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் காட்டிக் கொடுக்கும், அவலத்தில் தள்ளும் செயற்பாடுகள் இனியும் தொடராது உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். சமயம் என்பது வாழ வழிகாட்டும் தத்துவம். அதை உணர்ந்து கடைப்பிடிப்பவனே சமவாதிக, ஆன்மீகவாதி. அதைவிடுத்து சமயத்தின் பெயரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அது கூறும் புனித வழிகாட்டல்களை புறந்தள்ளி தூர எறிந்து ஏறிமிதித்து கூச்சலிடுபவன் தான் பிறந்த சமயத்தை இழிவுபடுத்தப் பிறந்தவன். சிதைக்கப்பிறந்தவன். பசுத்தோல் போர்த்திய புலி போன்றவன் என்பதே உண்மை. எனவே நமது நாட்டில் முளைவிடும் சமய அடிப்படை வாதம் என்ற முரட்டு, மோட்டுவாதங்களை வளரவிடக்கூடாது. மதமாற்றத்தின் மூலம் நோயைத் தடுக்கவோ முதுமையடைவதைத் தடுக்கவோ, மரணத்தைத் தடுக்கவோ முடியுமா ? அதற்கு உத்தரவாதம் அதாவது நோய், முதுமை, இறப்பு ஆகியவற்றைத் தடுத்து குறிப்பிட்ட வாழ்நாளில் ஒரு நாளாவது அதிகமாக இந்த உலகில் வாழவைக்க முடியும் என்ற உத்தரவாதத்தை எந்தவொரு சமயத்தலைவராலோ, குருவாலோ அல்லது மதமாற்றம் செய்ய எத்தனிப்பவராலோ வழங்க முடியாது. பொறுப்பற்ற, போலித்தனமான மதமாற்ற சிந்தனையும் இந்நாட்டின் நிம்மதிக்கு உலை வைக்கும் சக்தியாகிவிட்டது என்பது மறுக்கமுடியாததாகிவிட்டது. சர்வ மத தலைவர்கள் மகாநாடு கூட்டிப் பயன் இல்லை. சர்வமத மக்களையும் இணைக்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் . சமயங்கள் மனிதகுல நலனுக்குத் தடையாக இருப்பது ஏற்கக் கூடியதல்ல. நல்லதும் அலல். இதைப் புரிந்த கொண்டால் நாடும் உருப்படும். உலகமும் உய்வுபெறும். இது புத்தியுள்ளவர்களுக்கே புரியும். நன்றி :தினக்குரல்

0 கருத்துக்கள் :