இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது...

18.3.13

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு மாணவர்கள் கோஷம் எழுப்பியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இலங்கையில் ராஜபக்சேவின் மனித உரிமை மீறல்களை கண்டித்து தமிழக அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் தொடங்கிய உண்ணாவிரதம் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. தமிழ் ஈழத்துக்கான மாணவர் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறியதாவது: தமிழகம் முழுவதும் 10 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 18ம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். இதை முடக்கும் வகையில், தமிழக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி இன்று தமிழகத்தில் 20 மாவட்டங்களில் போராட்டம் நடைபெறும். இலங்கை அரசை கண்டித்தும், தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசை கண்டித்தும், சென்னையில் அரசு, சுயநிதி, பொறியியல், சட்ட கல்லூரிகள் உள்பட 25 கல்லூரிகளை ஒருங்கிணைத்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும். எங்களை கைது செய்தால், மறுநாளும் போராட்டம் நடத்துவோம். எங்கள் போராட்டம் ஓயாது. தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு திவ்யா கூறினார். அதன்படி கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஏராளமான மாணவர்கள் இன்று காலை குவிந்தனர். இதுகுறித்து ஏற்கனவே தகவல் வெளியானதால் துணை கமிஷனர் சுதாகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் திவ்யா தலைமையில் 23 கல்லூரியை சேர்ந்த 500 பேர், அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்து ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது, ராஜபக்சேவுக்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பினர். மாணவர்களின் முற்றுகை போராட்டத்தால் பதற்றம் ஏற்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் இன்று காலை 11.40 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சுங்க துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை ராமாபுரம் ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், வடபழனியில் எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி மாணவர்கள், ரெட்ஹில்ஸ் அருகே உள்ள ஜெயசூர்யா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், விருகம்பாக்கம் மீனாட்சி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள், அண்ணா பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்து வருகிறது.

0 கருத்துக்கள் :