கல்லூரி மாணவர்களை கைது செய்த காவல்துறைக்கு வைகோ கண்டனம்

11.3.13

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இராஜபக்சே அரசின் மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதிவிசாரணை நடத்த மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தகைய ஒரு தீர்மானத்தை இந்திய அரசே முன் வைக்க வேண்டும் என்றும், சுதந்திர தமிழ் ஈழமே ஒரே தீர்வாகும் என்பதால், அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்திய லயோலா கல்லூரி மாணவர்கள், போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இன்றி தனியார் கட்டிட வளாகத்துக்குள் தங்கள் அறப்போரை நடத்தினார்கள். இப்படி அறவழிப் போராட்டம் நடத்திய எட்டு மாணவர்களை நடுநிசிக்கு மேல், அதிரடியாக வளாகத்துக்குள் நுழைந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அந்த மாணவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கிருந்த 200 கல்லூரி மாணவர்களையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. அந்த இரவு வேளையில் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்த மறுமலர்ச்சி தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன், அகில இந்திய மாணவர் சங்க தமிழ் மாநிலச் செயலாளர் திருமலை, மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைப்பட இயக்குநர்கள் கௌதமன், களஞ்சியம், ராம் மற்றும் வழக்கறிஞர் அங்கையர்கண்ணி, எழுத்தாளர் கென்னடி, மாணவர் தலைவர்கள் அருண்சோரி, பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உண்ணாநிலை அறப்போர் நடத்துவது ஜனநாயக உரிமையாகும். அந்த அடிப்படை உரிமையை நசுக்கும் விதத்தில் காவல்துறை மாணவர்களை கைது செய்ததற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ‘தாயகம்’ வைகோ சென்னை – 8 பொதுச்செயலாளர் 11.03.2013 மறுமலர்ச்சி தி.மு.க.

0 கருத்துக்கள் :