தமிழக மாணவர்களினதும், புலம்பெயர் இளையோர்களதும் எழுச்சி ஈழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும்

26.3.13

இலங்கைத் தீவில் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா இனவாத சிங்கள அரசு காலம் காலமாக நடத்திவந்த இனவழிப்பு நடவடிக்கைகள் 2009 காலப் பகுதியில் தமிழர் தாயகப் பகுதிகளில் மனித குலமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு கோரத் தாண்டவம் ஆடியது.
 
இக் கொடூரச் செயலுக்கு சில நாடுகள், இணைந்து தீட்டிய நயவஞ்சகமான சூழ்ச்சிக்கு, சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும், அமைதியாக இருந்து தமிழ்மக்கள் மீதான இனவழிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் காரணமாக அமைந்தது.

அதன் விளைவாகவே முள்ளிவாய்க்கால் முற்றுகைக்குள் 45 ,ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஓர் இரு நாட்களில் விமான, ஆட்லறி பல்குழல், மற்றும்  இரசாயன, கொத்துக் குண்டுகளை வீசி மிகப்பெரிய இனப்படுகொலையை  நடத்தியதோடு, இன்றும் தமிழர் தாயகத்தில் பல்வேறு வழிகளில் இனவழிப்பும், சிங்களக் குடியேற்றங்கள் ஊடாக நிலப்பறிப்புக்களும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

1970 களின் பின்னரான காலப்பகுதியில் தமிழர் தாயகத்தில் ஏற்பட்ட மாணவர் எழுச்சியின் காரணமாக புரட்சி வெடித்தது, அதன் விளைவாக தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தினை மாணவர் சமூகம் முன்னின்று நடத்தியது, அன்றைய காலத்தில் தமிழீழ விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து இயக்கங்களும் மாணவர் கட்டமைப்பாகவே செயற்பட்டது என்பது வரலாற்றுப்பதிவாகும்.
 
மாணவர் சமூகமாக  உருவெடுத்த தமிழீழ விடுதலைப் போராட்டம், மரபுவழி இராணுவமாக மாறி போராடியதன் பயனாக வெற்றியின் எல்லையில் நின்றபொழுது, சர்வதேச அரசியல் நலன்சார் நோக்கங்களின் திட்டமிட்ட செயற்பாடுகளின் காரணமாக  இன்று தற்காலிக பின்னடைவை எதிர் நோக்கியுள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு பிறகு சர்வதேசம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்  தீர்வுக்கு  உரிய  நடவடிக்கை எடுக்க தவறியதன் காரணமாக,  சிறீலங்கா இனவாத சிங்கள அரசு தொடர்ந்தும் தமிழர்களை அடக்கி வருகிறது.
 
இத்தகைய தொடர் நடவடிக்கைகளும் செயற்பாடுகளுமே, இன்று தாய்த் தமிழக, புலம்பெயர் இளையோர்  சமூகத்தை, தங்கள் இனத்தின் சுதந்திரத்திற்காக எழுச்சி கொண்டு போராடவேண்டிய  சூழலை ஏற்படுத்தியுள்ளது! 

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள்" 

என்ற தேசியத் தலைவரின் சிந்தனைக்கு ஏற்ப தமிழக அரசியற்கட்சிகள், அமைப்புக்கள்,  அரசியல் நலன்களைத் தவிர்த்து, அவர்களின் ஆதரவுடன் மாணவர் சமூகம் முன்னெடுக்கும் உரிமைக்கான எழுச்சிமிகு போராட்டம் தமிழகம் முழுதும் வியாபித்து நிற்கின்றது.
 
உங்கள் போராட்டம், மீண்டும் ஒரு வரலாறு படைத்து நிற்கும் என்பதை நாம் மட்டுமல்ல, எமது உரிமைகளை வென்றெடுக்கப் போராடும் தமிழர்கள் அனைவரும் திடமாக நம்புகிறோம். இதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் போராட்டம் நடைபெறவேண்டுமென வேண்டிநிற்கிறோம். 

இன்று தாய்த் தமிழக மாணவர் சமூகமும், புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் இளையோர்களும்,  சமகாலத்தில் எழுச்சி கொண்டு, அரசியலில் புரட்சிசெய்ய களம் புகுந்துள்ளனர். மாணவர் சமூகத்தின் இப் போராட்டங்களின் ஊடாக உறுதியான அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது எமது அவாவாகும்.

பிரித்தானிய மற்றும் நோர்வே தமிழ் இளையோர்கள் தாமாக முன்வந்து, சர்வதேச சமூகத்திடமும் ஜக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய வல்லரசிடமும் தமிழ் மக்களுக்கு  நீதி கோரியும், தாய்த் தமிழக மாணவர் சமூகம் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும்  வகையிலும்.
 
ஆதரவைத் தெரிவித்து, தன்னெழுச்சியான கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய காலத்தின் தேவையை உணர்ந்து கடுமைகான குளிரையும் கருத்தில் கொள்ளாது தம்மை வருத்திக்கொண்டு இளையோர் சமூகம் முன்னெடுத்துள்ள போராட்டம் இலக்கை அடையவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான பூரண ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவு ஜீவிகளாக, தேசப் பற்றாளர்களாக, போர்க் கலையில் வல்லுனர்களாக, நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக, ஒரு புதிய புரட்சிகரமான இளம் பரம்பரை தோன்றம் பெறவேண்டும்.
 
இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக, நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும் என்ற தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையின் ஊடான வழிகாட்டலே இன்று தாய்த் தமிழக, புலம்பெயர் இளையோர் சமூகத்தை எழுச்சி கொண்டு உரிமைக்காக போராட  வைத்துள்ளது 

"மாணவர் சக்தி மாபெரும் சக்தி"

!தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
 

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

British Tamils Union ( BTU ) email- britishtamilsunion@gmail.com

0 கருத்துக்கள் :