சர்வதேச நீதி விசாரணை தேவை!- ஐ.நா. மனித உரிமை ஆணையம்

20.3.13


இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று ஐநா மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமை கழகத்தின் துணைத் தலைவர் கியாங்-வா பேசும் போது, எல்.எல்.ஆர்.சி.,யின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு கவனம் செலுத்தவில்லை. மறுகுடியேற்றம், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல் போன்றவற்றில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மறுகுடியேற்றம், நிவாரணம் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட அனைவரும் பயன் பெறும் வகையில் இலங்கை அரசு நேர்மையாக செயல்படவில்லை. ஐநா பொதுச்செயலாளர் அமைத்த குழு கண்டறிந்த மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் நீதி கிடைக்கச் செய்ய இலங்கை அரசு முயற்சிக்கவில்லை. இராணுவ நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படாததால்,படுகொலைகள் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் முடிக்கப்படாமலேயே உள்ளன. இதுபோன்ற, பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதால் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை மறுத்துள்ளது. இது தொடர்பாக, அந்நாட்டு பிரதிநிதி மகிந்த சமரசிங்க அளித்த விளக்கம் பின்வருமாறு:- 2009 போருக்கு பிறகு, இலங்கை மக்களின் அன்றாட வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐ.நா.மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகள், இலங்கை மீதான குற்றச்சாட்டுகளைத் தீர ஆராய வேண்டுமென்றும் தவறான முன் உதாரணம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகிறேன். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறைபாடுடைய, தவறான அர்த்தம் கற்பிக்கும் ஆவணங்களைக் காட்டி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :