சிறிலங்காவுக்கு மற்றுமொரு சர்வதேச குற்றச்சாட்டு

9.3.13


சிறிலங்காவுக்கு எதிரான மற்றுமொரு குற்றச்சாட்டு சர்வதேச ரீதியாக பதிவாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று தங்காலை பிரதேச சுற்றுலா விடுதியொன்றில், சாக்கீ குர்ஹாம் என்ற பிரிட்டன் பிரஜையான சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பணியாளர் கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறவில்லை என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சைமன் டென் சேக் தெரிவித்துள்ளார். கொலை தொடர்பிலான விசாரணைகள் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை கண்காணிக்கும் நோக்கில் குர்ஹாமின் சகோதரர் நசீருடன், பாராளுமன்ற உறுப்பினர் சைமன் டென் சிறிலங்கா சென்றிருந்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன் போது மேலும் அவர் தெரிவிக்கையில், குறித்த கொலையையும், நபருடன் இருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்திய சம்பவத்தில் கைதான சந்தேகநபரான உள்ளூர் அரசியல்வாதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் குறித்த விசாரணைகள் திருப்தி அடையும் வகையில் இல்லை என அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில், சைமன் டென் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இக்கொலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் சிறிலங்கா கிளை அறிவித்தள்ளது. அத்துடன் சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு பிரித்தானிய மகாராணியிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சைமன் டென் சேக் இங்கு குறிப்பிட்டிருந்தார். ஜெனிவா மனிதஉரிமை பேரவையில் அமெரிக்காவின் தீர்மானம், நேற்று வெளியாகியுள்ள நிலையில், இவரின் குற்றச்சாட்டும் அங்கு எதிரொலிக்கும் சாத்தியம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கோடிட்டு காட்டியுள்ளனர்.

0 கருத்துக்கள் :