முஸ்லிம்களின் மீது நேரடித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

29.3.13

பெஷன் பக் வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலை தாக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு குறித்த களஞ்சியசாலை தாக்கப்பட்ட தகவல் கிட்டியதும்,ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் சேதத்துக்குள்ளான பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் உரிமையாளருடனும் கலந்துரையாடியுள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இவ்வளவு காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலையேற்படுத்தி வந்த அமைப்பு இன்று நேரடியாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால் என்பதை விளக்கப்படுத்தியுள்ளதுடன்,இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு,இந்த செயல்கள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பையேற்படுத்தியுள்ளதெனவும் இவ்வாறான செயல்களை எவர் செய்தாலும் அவர்கள் தாரதரம் பாராமால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இனிமேலும் இவ்வாறான செயல்கள் இடம் பெறாமல் இருப்பதை பொலிஸார் உறுததிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய அமைச்சர். இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு போதுமான வீடியோ ஒளிப்பதிவுகள் உரியவர்களிடம் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :