என்ன விவாதிக்கப்பட்டது? என்ன முடிவெடுக்கப்பட்டது? கலைஞருடன்

18.3.13

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் நிலை பற்றி திமுக தலைவர் கலைஞருடன் விவாதிக்க இன்று மாலை மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் சென்னையில் கலைஞர் இல்லத்திற்கு வந்தனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். இன்று மாலையில் காங்கிரஸ் தலைவர்கள் உங்களை வந்து சந்தித்திருக்கிறார்கள். என்ன விவாதிக் கப்பட்டது? என்ன முடிவெடுக்கப்பட்டது? இன்று மாலையில் என்னைச் சந்தித்தவர்களிடம் நான் உறுதியாக தெரிவித்திருப்பது - “இலங்கை அரசாலும், இலங்கை அரசின் நிர்வாகத்தில் உள்ளவர்களாலும், இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை போர்க்குற்றங்கள் என்றும், இனப் படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.” அடுத்தபடியாக, “நம்பகத் தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று திருத்தங்கள் கொடுக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். நான் மேற்சொன்ன இந்தத் திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்திலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்களும் அதற்கு ஆவன செய்வதாக உறுதி அளித்துச் சென்றிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென்று நீங்கள் கேட்டுக் கொண்டதாகவும், அவர்கள் உறுதி அளித்துச் சென்றிருப்பதாகவும் சொல்கிறீர்கள். ஆனால் குலாம் நபி ஆசாத் எங்களிடம் கூறும்போது, இங்கே பேசப்பட்டவைகளை பிரதமரிடம் சென்று தெரிவிப்போம் என்றுதான் சொல்லியிருக்கிறார். உறுதிமொழி கொடுத்ததாக அவர் சொல்லவில்லையே? அவர்கள் எங்களிடம் சொன்னதை உறுதி அளித்ததாக நம்பித்தான் நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஏற்கனவே இருந்த “இறுக்கம்” இப்போது தளர்ந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? இலங்கைத் தமிழர்க்கு நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தால்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே “இறுக்கம்” தளர்ந்ததாக அர்த்தம். அமெரிக்கா தீர்மானத்தில் நீங்கள் கேட்கும் திருத்தங்களை இந்தத் தருணத்தில் கொண்டு வருவது சாத்தியமானது தானா? அமெரிக்க தீர்மானத்தில் நாங்கள் கேட்கும் திருத்தங்களையும் இணைத்துக் கொண்டு வர வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.

0 கருத்துக்கள் :