அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து இலங்கை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை

27.3.13


அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து இலங்கை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும், பிளேக் எச்சரித்துள்ளது போன்று இலங்கை தொடர்பான அனைத்துலகப் பொறிமுறை ஒன்றைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றும் இலங்கை அமைச்சர் டியு. குணசேகர தெரிவித்துள்ளார். போர்க்கால உரிமைமீறல்கள் குறித்து நம்பகமான- சுதந்திரமான விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை அமைச்சர் டியு.குணசேகர, “எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகாண வேண்டும். அதற்கு அனைத்துலகத் தலையீடு தேவையில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டிருந்தால் இவ்வாறான அனைத்துலக அழுத்தங்கள் ஏற்பட்டிருக்காது. எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படத் தேவையில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கையைப் பயமுறுத்தவே ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. பின்னர் அதன் கடுமையான தொனியையும் குறைத்தது. இலங்கை தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை கொண்டு வருவதாகக் கூறுவதெல்லாம் வெறும் பூச்சாண்டியே. அது குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவ்வாறு செய்வதன் மூலம் இலங்கை அதிபர் மேலும் பலமடைந்து எதிர்க்கட்சி மேலும் பலவீனமடையும். எனவே அத்தகைய காரியத்தை அமெரிக்கா செய்யாது. தற்போதுள்ள அரசியலமைப்பின் அடிப்படையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியும், 13வது திருத்தத்தையும் செயற்படுத்த முடியும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :